தகுதி இல்லாதவர்களுக்கு கடன் வழங்கக் கூடாது
விழுப்புரம், ஜன. 8: மானியம் உள்ளது என்பதற்காக தகுதியில்லாதவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்கக்கூடாது என்று வாழ்ந்து காட்டுவோம் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் ஆர். பழனிச்சாமி தெரிவி


விழுப்புரம், ஜன. 8: மானியம் உள்ளது என்பதற்காக தகுதியில்லாதவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்கக்கூடாது என்று வாழ்ந்து காட்டுவோம் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் ஆர். பழனிச்சாமி தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். வாழ்ந்து காட்டுவோம் திட்ட மேலாளர் கே. ராஜமாணிக்கம் வரவேற்றார், இந்தியன் வங்கி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ். பாலச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:
விழுப்புரம் மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் தற்போது கண்டமங்கலம், தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் கல்வராயன்மலை உள்ளிட்ட 5 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்காக அரசு ஒதுக்கிய ரூ. 18 கோடியில் ரூ. 14 கோடி விடுவிக்கப்பட்டுள்ளன. 5 ஒன்றியங்களில் அமைக்கப்பட்ட 1,043 சுய உதவிக் குழுக்கள் நிதியினை பெற்று பயனடைந்துள்ளன. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் பயனடைந்துள்ளனர். இந்த 1,043 குழுக்களில் 325 மாற்றுத்திறனாளிகள் குழுவும் அடங்கும்.
குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. 5,310 பேருக்கு பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இவர்களில் 4,535 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும் 4,143 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். மலர் சாகுபடி, காய்கறி சாகுபடி, பருத்தி சாகுபடி, பால் உற்பத்தியாளர்கள் ஆகிய தொழிற்கூட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 10 சதவீதம் உறுப்பினர்களின் பங்காகவும், 40 சதவீதம் வங்கிக் கடனாகவும், 50 சதவீதம் வாழ்ந்து காட்டுவோம் திட்ட நிதியாகவும் திரட்டி மொத்தம் ரூ. 61 லட்சம் மதிப்பில் சாகுபடி, உற்பத்தி மற்றும் விற்பனைப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
பல தொண்டு நிறுவனங்கள் மகளிர் குழுக்களுக்கு நேரிடையாக சிறு சிறு கடன்களை அதிக வட்டியில் கொடுத்து வருவதாக புகார்கள் வருகின்றன. அவ்வாறு அதிக வட்டி வசூலிப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அந்நிறுவனங்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்படும் ஒன்றியங்களில், தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்கப்படும் குழுக்களுக்கு வங்கிகள் புதிய கணக்குகள் தொடங்கக் கூடாது.
மானியம் உள்ளது என்பதால் தகுதியில்லாதவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்கக் கூடாது. தகுதியானவர்களுக்கு தாமதமின்றி கடன் வழங்க வேண்டும். நகர்புறத்தில்
ரூ. 1 கோடி கடன் வழங்குவதை விட, கிராமப்புற ஏழை மக்களுக்கு ரூ. 10 ஆயிரம் கடன் வழங்குவது உயர்வானதாகும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...