நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மனிதக் கடத்தல் தடுப்புக்கு உள்துறை அமைச்சகம் முக்கியத்துவம் அளிக்கிறது: உள்துறை அமைச்சக கூடுதல் செயலர் பி. பாமதி

தமிழகத்தில் வாச்சாத்தி மலைக் கிராமத்தில் 1992-ம் ஆண்டு நிகழ்ந்த போலீஸார் அத்துமீறல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கு பலரது கவனத்தையும் ஈர்த்த ஒன்று.  இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரிடம் ஒரு நபர் கமிஷனாக சென

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:24 pm

வே.சுந்தரேஸ்வரன்

தமிழகத்தில் வாச்சாத்தி மலைக் கிராமத்தில் 1992-ம் ஆண்டு நிகழ்ந்த போலீஸார் அத்துமீறல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கு பலரது கவனத்தையும் ஈர்த்த ஒன்று.

 இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரிடம் ஒரு நபர் கமிஷனாக சென்று விசாரணை நடத்தியவர் பி. பாமதி ஐ.ஏ.எஸ். அவரது கள ஆய்வு அறிக்கைதான், கடந்த ஆண்டு இது தொடர்பான நீதிமன்ற தீர்ப்புக்கு முக்கிய ஆதாரமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

 பி. பாமதி ஐ.ஏ.எஸ். தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். 1979-ம் ஆண்டு பிகார் மாநிலப் பிரிவில் ஐ.ஏ.எஸ். தேர்வானவர். பிகாரில் மாவட்ட ஆட்சியராகவும், நிதி, மின்சாரம், சுகாதாரத் துறைகளில் உயர் அதிகாரியாகவும், யுனிசெஃப், யு.என்.எஃப்.பி.ஏ., யு.என்.டி.பி. என பல அமைப்புகளில் பணியாற்றியவர்.

 தில்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தில் தற்போது கூடுதல் செயலராகப் பணியாற்றி வருகிறார்.

 33 ஆண்டுகால இவரது ஐ.ஏ.எஸ். பணி அனுபவம் பெற்ற பி.பாமதியை "தினமணி'க்காக பேட்டி கண்டபோது...:

 தினமணி: தமிழகத்தில் வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரிடம் விசாரணை நடத்த ஒரு நபர் கமிஷனாக நீங்கள் சென்ற அனுபவம் குறித்து...?

 பாமதி: மத்திய அரசுப் பணியில் இருந்து "டெபுடேஷனில்' தமிழகம் சென்றிருந்த நான், தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினர் நல ஆணையத்தின் தென் மண்டல இயக்குநராக இருந்தேன். சந்தனக் கடத்தல் தொடர்பாக வாச்சாத்தியில் வனத் துறை, காவல் துறையின் கூட்டுக் குழுவினர் நடத்திய சோதனையின்போது அத்துமீறல் நிகழ்ந்ததாகப் புகார் எழுந்தது. அச்சம்பவத்தை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வதற்கான ஒரு நபர் கமிஷனாக எனது பெயரை நீதிமன்றம் அறிவித்தது. இது பற்றி டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் எனக்கே தெரிய வந்தது.

 வாச்சாத்தி மலைக் கிராமத்திற்குள் போலீஸôர் நுழைவதற்கு அம்மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். நானே தனியாகச் சென்று அக்கிராமத்தில் உள்ள பெண்கள், குழந்தைகளிடம் நேரில் விசாரணை நடத்தினேன். அச்சம்பவம் என்னை மிகவும் பாதித்த ஒன்று.

 விசாரணை அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன். எதையும் கூட்டாமல் குறைக்காமல் அங்கு நிகழ்ந்த விஷயங்களை உள்ளவாறு எனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன். அதன் பிறகு சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் சாட்சிகளின் குறுக்கு விசாரணைக்காக 10 ஆண்டுகளுக்குப் பிறகு தருமபுரி நீதிமன்றத்திற்கு நேரில் சென்று வந்தேன். நீதிமன்றத்தில் நான் அளித்த விசாரணை அறிக்கை அந்த வழக்கின் தீர்ப்புக்கு முக்கிய ஆதாரமாக இருந்ததாகக் கூறுகின்றனர்.

 தினமணி: நீங்கள் முதலில் எங்கு ஐ.ஏ.எஸ். பணியைத் தொடங்கினீர்கள்?

 பாமதி: நான் 1979-ல் சிவில் சர்வீஸ் தேர்வில் பிகார் மாநிலப் பிரிவில் ஐ.ஏ.எஸ். அதிகாரியானேன். பிகார் ராஞ்சியில் பயிற்சி பெற்றேன். பிறகு துங்கா மாவட்டத்தில் சார்பு- மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றினேன்.

 பிகார் மாநிலத்தில் உள்ள முங்கே மாவட்டத்தில் நான் ஆட்சியராகவும், எனது கணவர் பி.எம். நாயர் காவல் துறை கண்காணிப்பாளராகவும் பணியாற்றினோம். அது மறக்க முடியாத அனுபவம். இருவரும் ஒரே இடத்தில் பணியாற்றியதால் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை, மாவட்ட நிர்வாக விஷயங்கள் ஆகியவற்றில் பரஸ்பர ஒத்துழைப்புடன் பணியாற்ற முடிந்தது.

 மாவட்ட வளர்ச்சி நிதியின் மூலம் காவல் துறையினர் நலன் சார்ந்த திட்டங்களை

 மேற்கொள்ள முடிந்தது. குறிப்பாக அங்குள்ள தியாரா பகுதியில் உள்ள குன்றில் முதல் காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது.

 நாங்கள் இருவரும் ஒரே மாவட்டத்தில் பணியாற்றியதால் சிறியவர்களாக இருந்த எனது குழந்தைகளைப் பராமரிப்பதில் சிரமம் இருந்தது. அதனால், அருகே உள்ள வேறு ஒரு இடத்திற்கு எங்களில் ஒருவரைப் பணியிடம் மாற்றுமாறு அரசிடம் கேட்டோம்.

 ""ஒரு நாளில் பாதி நேரம் குழந்தையை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்; பாதி நேரம் உங்கள் மனைவி பார்த்துக் கொள்ளட்டுமே'' என்று அப்போது மாநில முதல்வராக இருந்த பிந்தேஸ்வரி துபே எனது கணவரிடம் வேடிக்கையாக கூறினார்.

 பாட்னாவின் தலைமைச் செயலகத்தில் பல துறைகளில் செயலராகப் பணியாற்றினேன்.

 தினமணி: பெண் குழந்தைகளைக் கடத்துவது (ஹ்யூமன் டிராஃபிக்கிங்) போன்ற கடத்தல்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் நீங்கள் ஆர்வம் காட்டுவது பற்றி...?

 பாமதி: மத்திய அரசின் பெண்கள், குழந்தைகள் அதிகாரமளித்தல் துறையில் பணியாற்றினேன். அப்போது, பெண் குழந்தைகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது தொடர்பாக இந்தியாவிலேயே முதல் முறையாக ஆய்வு அறிக்கை தயாரித்து அரசின் சார்பில் 1996-ம் ஆண்டு அளித்தேன்.

 இதற்காக, சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வேண்டியிருந்தது. அப்போது ஏற்பட்ட அனுபவம் எனது வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

 பெண் சிசுக் கொலை, கருக்கொலை எல்லாம் கேள்விப்படுகிறோம். ஆனால், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில் அத்தொழிலில் ஈடுபடுத்துவோர் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். அதற்குக் காரணம், அந்தப் பெண் குழந்தைகள் அதே தொழிலுக்குத் தேவைப்படுவதால்தான். இதை கள ஆய்வில் நேரடியாகப் பார்த்தபோது மனம் பதைபதைத்தது.

 திருமணம் செய்வதாகவும், வேலை வாங்கித் தருவதாகவும், சினிமாவில் நடிக்க வைப்பதாகவும் கூறி, ஏமாற்றி பெண்களையும் சிறுமிகளையும் சமூக விரோதிகள் இத்தொழிலில் ஈடுபடுத்தி வருவதையும் காண முடிந்தது.

 அந்த ஆய்வுக்குப் பிறகு தொடர்ந்து இது போன்ற பெண், குழந்தைகள் கடத்தல் பற்றி தகவல் வந்தால் தேவையான மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவி வருகிறேன். இதற்கு எனது கணவரும் உதவுகிறார். இன்றைக்கும் அது தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்.

 இது போன்ற குழந்தைக் கடத்தலுக்கு வறுமை மிக முக்கியக் காரணியாக இருக்கிறது. இயற்கைச் சீற்றங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் இது போன்ற பாதிப்பு உள்ளது.

 பல தொழில்களிலும் ஆண் என்றால் வாய்ப்பும், பெண்கள் என்றால் சுரண்டலும் தொடரத்தான் செய்கிறது. இது மாறியாக வேண்டும்.

 தினமணி: பெண், குழந்தைகள் போன்ற மனிதக் கடத்தலைத் தடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து...?

 பாமதி: பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து குழந்தைகள், பெண்கள் கடத்தல் தடுப்பைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில், மத்திய உள்துறை அமைச்சகம் பல முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவுகள் அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், பல பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன. மாநில அரசு ஒத்துழைப்புடன் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துடன் உள்துறை அமைச்சகம் இணைந்து இது தொடர்பான 6 மாதப் படிப்பை நடத்தி வருகிறது. சுமார் 1000 பேர் வரை இப்படிப்பில் சேர்ந்துள்ளனர்.

 தினமணி: உங்கள் கல்வி அனுபவம் பற்றி...?

 பாமதி: சென்னை மந்தைவெளியில்தான் எங்கள் வீடு இருந்தது. வீட்டில் நான் உள்பட 5 சகோதரிகள். இரு சகோதரர்கள். எனது இளைய சகோதரி சுமதி ஹரிஹரன் ஐயர், இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் நடுவர்.

 சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில்தான் எம்.ஏ. ஆங்கிலம் படித்தேன். அதே கல்லூரியிலேயே 3 ஆண்டுகள் ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றினேன்.

 1978-ல் முதல் முறையாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். 1979-ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். பணியிடம் கிடைத்தது.

 எனது கணவர் பி.எம். நாயர் 1978-ம் ஆண்டில் பிகார் பிரிவில் ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்றவர். தற்போது மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் சிறப்பு டைரக்டர் ஜெனரலாகப் பணியாற்றி வருகிறார்.

 தினமணி: ஓர் அரசு ஊழியர் என்ற முறையில் உங்களுக்குள்ள கடமையாக நீங்கள் கருதுவது...?

 பாமதி: எந்தப் பணியை அளித்தாலும் அதில் ஆர்வத்துடன் சிறப்பாகச் செய்ய வேண்டும். ஆர்வம் சிறிதளவும் குறையாமல் இருக்க வேண்டும். நான் அப்படித்தான் இருந்து வருகிறேன். இது வரை பல துறைகளிலும் பணியாற்றியுள்ளேன். குறையொன்றுமில்லை என்றுதான் சொல்வேன். மேலும் பணியில் சேவை மனப்பான்மையோடு ஈடுபட வேண்டும். பேராசையின்றி இருத்தல் வேண்டும்.

 வேலை செய்வதற்குச் சம்பளம் எதிர்பார்ப்பது நியாயமே. ஆனால், பணத்தாசை கூடாது. வாழ்வில் உயர் நெறிகள் வேண்டும். பிறருக்குத் தீங்கு செய்யக் கூடாது. முடிந்தால் உதவி செய்ய வேண்டும். அதற்கு ஈடுபாடும் அவசியம்.

 கடந்த ஆண்டு மானஸரோவர்-கைலாஷ் யாத்திரையின் ஒன்றரை மாதப் பயணத்திற்காக 64 பேரை எனது தலைமையில் அழைத்துச் சென்று வந்தேன்'' என்கிறார் மலர்ந்த புன்னகையுடன் பி. பாமதி ஐ.ஏ.எஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.