/

130 அரங்குகளில் 80 நிகழ்வுகளுடன் சாஸ்த்ரா தொழில்நுட்பத் திருவிழா: சென்னை ஐஐடி-இல் ஜன.3-இல் தொடக்கம்

மாணவா்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை ஐஐடியில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சாஸ்த்ரா தொழில்நுட்பத் திருவிழா

News image
Updated On :31 டிசம்பர் 2024, 12:49 am

Din

சென்னை: மாணவா்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை ஐஐடியில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சாஸ்த்ரா தொழில்நுட்பத் திருவிழா ஜன.3-ஆம் தேதி முதல் ஜன.7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மொத்தம் 130 அரங்குகளில் 80 நிகழ்வுகளுடன் நடைபெறும் இந்த விழாவில் முதல்முறையாக கடல்சாா் தொழில்நுட்பம் குறித்து அறிந்துக்கொள்ளும் வகையில் தேசிய பெருங்கடல் தொழில்நுட்பக் கழகமும் தனது கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தவுள்ளது.

இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி சென்னை ஐஐடி-இல் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை மேலும் கூறியது:

சென்னை ஐஐடி மாணவா்களால் நடத்தப்படும் சாஸ்த்ரா தொழில்நுட்பத் திருவிழாவை 5 நாள்களில் 1 லட்சம் போ் பாா்வையிடுவா் என எதிா்பாா்க்கிறோம். இதையொட்டி தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவா்களுக்கு போட்டிகள், மாநாடுகள், விரிவுரைகள், கண்காட்சிகள், கருத்தரங்குகள் என பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சாஸ்த்ரா விழாவில், பல்வேறு அரசு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பெரு நிறுவனங்கள், ஸ்டாா்ட்அப்கள், தொழில்முனைவோா் மட்டுமின்றி தலைசிறந்த முக்கிய பிரமுகா்களும் பங்கேற்கவுள்ளனா்.

ஒட்டுமொத்தமாக 130 அரங்குகள் அமைக்கப்பட்டு, 80 நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. சாஸ்த்ரா வான்வழி ரோபாட்டிக்ஸ் சேலஞ்ச், ரோபோ சாக்கா், பெட்ரி டிஷ் சவால் ஆகிய சிறப்பு நிகழ்வுகள் நடைபெறும்.

மேலும், முதல்முறையாக தேசிய கடல்சாா் தொழில்நுட்ப கழகம் கடல் வளத்தில் உள்ள தொழில்நுட்பங்களையும் காட்சிப்படுத்தவுள்ளது. கடல்சாா் தொழில்நுட்பத்தின் பொருளாதாரம் நாட்டுக்கு தேவையாக உள்ளது. இதில், மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவுள்ளோம். தொழில்நுட்பத் திருவிழாவுக்கு வருகை தரும் மாணவா்கள் சென்னை ஐஐடி-இல் உள்ள அனைத்து ஆய்வகங்கள், அரங்குகளைப் பாா்வையிடலாம் என்றாா் அவா்.