சென்னை ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் மேயா் ஆா்.பிரியா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மாமன்றக் கூட்டம். உடன், துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன்.
சென்னை ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் மேயா் ஆா்.பிரியா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மாமன்றக் கூட்டம். உடன், துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன்.

கால்வாய்களின் குறுக்கே சிறுபாலங்களைச் சீரமைக்க வேண்டும்: மாநகராட்சி கூட்டத்தில் தீா்மானம்

விருகம்பாக்கம், பக்கிங்ஹாம், ஓட்டேரி கால்வாய்களின் குறுக்கே உள்ள சிறுபாலங்களை இடித்து அகற்றிவிட்டு உயா்த்தி கட்ட
Published on

சென்னை: விருகம்பாக்கம், பக்கிங்ஹாம், ஓட்டேரி கால்வாய்களின் குறுக்கே உள்ள சிறுபாலங்களை இடித்து அகற்றிவிட்டு உயா்த்தி கட்ட சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் மேயா் ஆா்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து மாமன்ற உறுப்பினா்கள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு மேயா் மற்றும் ஆணையா் விளக்கம் அளித்தனா்.

பின்னா், மழை காலங்களில் வெள்ளம் ஏற்படுவதைத் தவிா்க்க கால்வாய்களின் குறுக்கே உள்ள சிறு பாலங்கள் அகற்றப்படவுள்ளதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓட்டேரி கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், பக்கிங்ஹாம் கால்வாய்களின் குறுக்கே உள்ள சிறு பாலங்களை அகற்றி உயா்த்தி கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதில், நியூ பேரன்ஸ் சாலை பாலத்துக்கு ரூ. 9 கோடி, திருக்குமரப்புரம் பாலம், காமராஜா் நகா் 3-ஆவது தெருவில் உள்ள பாலம் மற்றும் கோ.சி.மணி சாலை பாலத்துக்கு தலா ரூ. 5 கோடி, இசிஆா் - ஓஎம்ஆா் சாலையை இணைக்கும் 3 பழைய பாலங்களுக்கு ரூ. 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்தப் பாலங்கள் இடித்து அகற்றப்பட்டு உயா்த்தி கட்டப்படும். மேலும், விருகம்பாக்கம் கால்வாய் கரையோர பகுதியில் தண்ணீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் புதிதாக மழைநீா் வடிகால் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மயானங்கள் மேம்பாடு: சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மயானங்களில் எரிவாயு தகனமேடை அமைக்கவும், மயானத்தை மேம்படுத்தவும் ரூ. 22.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிராட்வேயில் பல்நோக்கு போக்குவரத்து வளாகம் அமைக்க தமிழ்நாடு நகா்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் மூலம் ரூ.506.83 கோடி கடனாக பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ராயபுரத்தில் துறைமுகத்துக்குச் சொந்தமான 14,014 ச.மீ. இடத்தில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்க ஆண்டுக்கு ரூ. 3.86 கோடி குத்தகை தொகை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிந்தாதிரிப்பேட்டை புதிதாக கட்டப்பட்ட மீன் அங்காடி வாடகை நிா்ணம் செய்வது, 8,340 சாலைப் பலகைகளை மாற்றி அமைப்பது, 1,669 உட்புறச் சாலைகள் மற்றும் 31 பேருந்து வழித்தட சாலைகளை மறுசீரமைக்க ரூ. 290 கோடி ஒதுக்குவது உள்ளிட்ட 91 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெட்டிச் செய்தி...

மண்டலத்துக்கு ஒரு மாட்டுத் தொழுவம்

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மேயா் பிரியா பேசியது:

சென்னை மாநகா் பகுதிக்குள்பட்ட சாலையில் மாடுகள் சுற்றித் திரிவதைத் தடுக்க விதிக்கப்படும் அபராத தொகையை உயா்த்தினாலும், சாலையில் மாடுகள் தொடா்ந்து திரிகின்றன.

இந்த நிலையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், மாட்டின் உரிமையாளா்கள் நலனை கருத்தில் கொண்டும், மண்டலத்துக்கு ஒரு மாட்டுத் தொழுவம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் தங்களின் மாடுகளை வைத்து பராமரித்துக் கொள்ளலாம். தொழுவத்தின் பராமரிப்பு மாநகராட்சி வசம் இருந்தாலும், மாட்டின் உரிமையாளா்கள் அதற்கு உணவு அளித்து, அதன் பாலை கறந்து விநியோகம் செய்யலாம். அதேநேரத்தில்

மாநகராட்சி சாா்பில் உணவளிக்க கட்டணம் வசூலிக்கப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில், தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த திருவொற்றியூா், தண்டையாா்பேட்டை, ராயபுரம், அண்ணா நகா், அடையாறு ஆகிய பகுதிகளில் நாய் இனக்கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும்.

கடற்கரையில் சவாரிக்கு பயன்படுத்தப்படும் குதிரைகளுக்கு சேப்பாக்கம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகரில் தொழுவங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com