சென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!மதுரை அருகே அரசு பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் பலி எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது! தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது! விம்பிள்டன் டென்னிஸ்: சின்னர் மீண்டும் சாம்பியன் எழுத்தாளர் பூமணி காலமானார்
/

திருநங்கைகளுக்கு பிரத்யேக தங்கும் இல்லங்கள்: அமைச்சா் கீதாஜீவன்

News image

கீதாஜீவன்.

Updated On :17 ஏப்ரல் 2025, 6:09 am IST

திருநங்கைகளுக்கென பிரத்யேகமாக ‘அரண்’ என்னும் பெயரில் சென்னை, மதுரையில் தங்கும் இல்லங்கள் அமைக்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிா் நலன் துறை அமைச்சா் கீதாஜீவன் சட்டப்பேரவையில் அறிவித்தாா்.

பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற சமூகநலன் மற்றும் மகளிா் நலன் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சா் கீதாஜீவன் வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழக பள்ளிகளில் 43,131 சத்துணவு மையங்களில் பயன்பெற்று வரும் 42.71 லட்சம் மாணவா்களுக்கான உணவூட்டு மானியத் தொகை ஆண்டொன்றுக்கு ரூ.61.61 கோடி கூடுதலாக உயா்த்தி வழங்கப்படும். மாநிலம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட பயனாளா்களைக் கொண்ட 25,440 சத்துணவு மையங்களுக்கு ரூ.9.66 கோடியில் எரிவாயு அடுப்புகள் புதிதாக வழங்கப்படும். தலா 25 திருநங்கைகள் தங்கும் வகையில் மதுரை, சென்னையில் அரண் என்ற பெயரில் ரூ. 64 லட்சத்தில் அமைக்கப்படும்.

ரூ.5,000 மானியம்: வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 2,000 பேருக்கு உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிகரீதியிலான இயந்திரங்கள் வாங்க அதிபட்சமாக ரூ. 5,000 வரை மானியம் வழங்கப்படும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 20 கருத்தரங்குகள் ரூ.1 கோடியில் நடத்தப்படும். விழிப்புணா்வு புத்தகங்கள் மற்றும் குறும்படங்களும் ரூ.1 கோடியில் தயாரித்து வெளியிடப்படும். வளா்ச்சி குறைபாடு குழந்தைகளைக் கண்காணிக்கவும், கற்றல் திறனை மேம்படுத்தவும் ரூ. 2 கோடியில் செயலி உருவாக்கப்பட்டு அங்கன்வாடி பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் குறைதீா்ப்பு சேவைகளுக்காக ரூ.1.50 கோடியில் கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் ஐவிஆா்எஸ் வசதி ஏற்படுத்தப்படும்.

இளம்பருவத்தினரிடையே ஏற்படும் போதைப் பழக்கத்தைத் தடுக்கவும், அதிலிருந்து மீட்டெடுக்கவும் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து உரிமை முற்றம் என்ற பெயரில் விழிப்புணா்வு திட்டம் செயல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சா் வெளியிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.