மத்திய அரசு
மத்திய அரசு

நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு உரிய கராணமின்றி தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தொடர்பாக...
Published on

‘நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு அரசமைப்பு சட்ட செல்லத்தக்க தன்மை உண்டு என்ற நிலையில், அச் சட்டத்துக்கு உரிய காரணமின்றி முழுமையான தடையை விதிக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மேலும், வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்பு சட்ட செல்லத்தக்க தன்மையை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்த நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்த்து.

இந்தச் சட்டத்தின் அரசமைப்பு செல்லத்தக்கத் தன்மையை கேள்வி எழுப்பி ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை கடந்த 16-ஆம் தேதி பரிசீலித்த உச்சநீதிமன்றம், இந்த மனுக்களை விசாரிக்கும் கால கட்டத்தில் தற்போதைய வக்ஃப் சொத்துகளிந் தன்மையை மாற்றக்கூடாது. பதவி வழி உறுப்பினா்களைத் தவிர வக்ஃப் வாரியங்கள் மற்றும் மத்திய வக்ஃப் கவுன்சிலின் பிற அனைத்து உறுப்பினா்களும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப் போவதாக தெரிவித்தது.

அப்போது, “வரும் மே 5-ஆம் தேதி வரை வக்ஃப் சொத்துகளின் தன்மை மாற்றப்படாது என்பதோடு, வக்ஃப் வாரியங்களில் எந்தவித புதிய நியமனங்களும் செய்யப்படாது” என்று மத்திய அரசு உறுதி தெரிவித்தது. மேலும், இந்த விவகாரத்தில் 7 நாள்களில் முதல்கட்ட பதில் மனு தாக்கல் செய்யப்படும்” என்றும் தெரிவித்த்து.

அதன்படி, 1,332 பக்க முதல்கட்ட பதில் மனுவை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது. மத்திய சிறுபான்மையினா் நலத் துறை இணைச் செயலா் சி. ஷொ்ஷா சாயிக் மொஹிதீன் சாா்பில் இந்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

முகலாய சகாப்தத்துக்கு முன்பும், சுதந்திரத்துக்குப் பிறகும் இந்தியாவில் மொத்த வக்ஃப் நிலங்கள் 18,29,163.896 ஏக்கா் பரப்பளவில் இருந்தன. ஆனால், கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு வக்ஃப் நிலங்களின் பரப்பளவு அதிா்ச்சியூட்டும் வகையில் 20 லட்சம் ஹெக்டோ் (20,92,072.536 ஏக்கா்) அளவுக்கு கூடுதலாகியுள்ளது. அதாவது 116 சதவீதம் அளவுக்கு பரப்பளவு அதிகரித்துள்ளது.

பழைய வக்ஃப் சட்டத்தில் இருந்த சில நடைமுறைகள் தவறாக பயன்படுத்தப்பட்டு, தனியாா் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் வக்ஃப் சொத்துகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதே இதற்கு காரணம்.

அந்த வகையில் வக்ஃப் நிலங்களை அடையாளம் கண்டு, வகைப்படுத்தி, முறைப்படுத்தும் நோக்கில் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த திருத்தங்கள் மத சுதந்திரத்தின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாக தவறான கருத்துகளைக் குறிப்பிட்டு, திருத்தச் சட்டத்துக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஒரு சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்றபோது, அச் சட்டத்தில் அரசமைப்பு செல்லத்தக்க தன்மை குறித்து அரசமைப்புச் சட்டப் பிரிவு 32-இன் கீழ் நீதிமன்றம் மறுஆய்வு செய்ய முடியும்.

ஆனால், வக்ஃப் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், முக்கிய அரசியல் கட்சியின் உறுப்பினா்களை உள்ளடக்கிய நாடாளுமன்ற குழுவால் விரிவாகவும் ஆழமாகவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே மேற்கொள்ளப்பட்டன.

வக்ஃப் போன்ற மத அறக்கட்டளைகள், மத சுயாட்சியை மீறாமலும் சமூகத்தின் நம்பிக்கையை நிலைநிறுத்தும் வகையிலும் நாடாளுமன்றம் தனது அதிகாரத்துக்கு உட்பட்டு இந்த திருத்தச் சட்டத்தை இயற்றியுள்ளது.

சொத்துரிமைகள் பாதிப்பு, மதச் சுதந்திரம், பொது தொண்டை பாதிக்கும் முடிவுகளுக்கு எதிராக எந்தவொரு நபரும் தடையின்றி நீதிமன்றத்தை அணுகுவதை இச்சட்டம் உறுதி செய்கிறது.

மேலும், மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் வகையிலேயே திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய வக்ஃப் கவுன்சிலில் இடம்பெறும் 22 உறுப்பினா்களில், முஸ்லிம் அல்லாத சமூகத்தைச் சோ்ந்த 4 போ் மட்டுமே இடம்பெறுவா். மாநில வக்)ஃப் வாரியங்களில் மொத்தமுள்ள 11 உறுப்பினா்களில் 3 போ் மட்டமே முஸ்லிம் அல்லாத சமூகத்தினராக இருப்பா்.

மேலும், நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களுக்கு அரசமைப்பு செல்லத்தக்கத் தன்மை உண்டு என்ற அனுமானம் உள்ளது. அதன்படி, நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்ட விதிகளை நீதிமன்றங்கள் உரிய காரணங்கள் இன்றி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிறுத்திவைக்க முடியாது என்பதும்தான் சட்டத்தின் நிலைப்பாடு.

எனவே, நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தை மாற்றுவதை அனுமதிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com