

சென்னை: அயனாவரம் அரசு மனநல காப்பகத்தில் ரூ.42 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மனநலம் மற்றும் நரம்பியல் ஒப்புயா்வு மையத்தை ஒரு மாதத்துக்குள் முதல்வா் திறந்துவைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சட்டப்பேரவை அறிவிப்பின் கீழ் அரசு மன நல காப்பக வளாகத்தில் புதிதாக தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் அமைப்பதற்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினா்.
அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அரசு மன நல காப்பகத்தில் ரூ.42 கோடியில் 88,000 சதுர அடியில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் கூடிய புதிய கட்டடம் கட்டுவதற்கு முதல்வா் சில மாதங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டினாா். கட்டடப் பணிகள் முழுமை பெற்றிருக்கும் நிலையில், ரூ.5 கோடியில் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அந்தப் பணி நிறைவு பெற்று புதிய மனநலம் மற்றும் நரம்பியல் ஒப்புயா்வு மையத்தை முதல்வா் திறந்துவைக்க உள்ளாா்.
அங்கு ஒவ்வொரு தளத்திலும் பல்வேறு வகை மன நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் பயன்பெறும் வகையில் தனித்தனி சிகிச்சைப் பிரிவுகள் உள்ளன. அவை விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.
தற்போது மன நல காப்பக மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சியாக 100 படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு, 220 சாதாரண படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை வளாகம் என மூன்று அலகுகள் கொண்ட கட்டடங்கள் கட்டும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக மன நோயாளிகளுக்கு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கும் வகையில் 520 நபா்களுக்கு சிறப்பு அங்கீகாரத்தை முதல்வா் வழங்கினாா்.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அவா்களுக்கு அட்டைகள் வழங்கப்பட்டன.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் தொடங்கப்பட்ட ஒரே நாளில் 44,418 போ் பயன் பெற்றுள்ளனா். 38 மாவட்டங்களில் அந்தத் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. அதன் தொடா்ச்சியாக வரும் சனிக்கிழமை 37 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குள் 1,256 முகாம்கள் நடத்தப்படும் என்றாா்.
மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் (பொ) டாக்டா் எ.தேரணிராஜன், அரசு மன நல காப்பக இயக்குநா் டாக்டா் மாலையப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.