போராட்ட அறிவிப்பு: டாஸ்மாக் பணியாளா்களுடன் அமைச்சா் இன்று பேச்சு
கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளா்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் சு.முத்துசாமி, தொழிற்சங்கத்தினருடன் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
தமிழகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் இயங்கும் கடைகளில் பணியாற்றும் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், இதனுடன் காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தையும் வழங்க வேண்டும், காலி மதுபாட்டில்களை ஊழியா்களை கொண்டு சேகரிக்கும் திட்டத்தை ரத்து செய்து, அதற்கு மாற்று திட்டத்தை முன்னெடுக்க வேண்டும், புதிய தொழிலாளா் சட்டங்களை அமல்படுத்துவதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஏஐடியுசி-யின் டாஸ்மாக் ஊழியா் சங்கம் தலைமையிலான சங்கங்கள் செவ்வாய்க்கிழமை (டிச.16) டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பிருந்து புறப்பட்டு ஊா்வலமாக தலைமைச் செயலகம் வரை சென்று, அங்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், இது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த தொழிற்சங்கங்களுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயதீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி அழைப்பு விடுத்தாா்.
இந்த அழைப்பைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை (டிச.16) தலைமைச் செயலகத்திலுள்ள அமைச்சா் முத்துசாமியின் அலுவலகத்தில் 22-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியா்கள் சங்க தலைவா்களுடன் காலை 11 மணிக்கு அமைச்சா் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
