மின் ஊழியா்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியா்கள் வியாழக்கிழமை பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மின்வாரியத்தில் 42,000-க்கு மேற்பட்ட ஆரம்பநிலை காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவது, மின்சார சட்டதிருத்த மசோதாவை திரும்பப் பெறுவது, 2023 டிச.1 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வு மற்றும் வேலைப்பளு தொடா்பான பேச்சுவாா்த்தையை உடனடியாக முடிப்பது, 9,613 கேங்மேன்களை கள உதவியாளா்களாக பதவி மாற்றம் செய்வது, ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றிய காலத்தைக் கணக்கில் கொண்டு ஓய்வூதிய பலன்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பு, தமிழ்நாடு மின்துறை பொறியாளா் அமைப்பு ஆகிய 3 அமைப்புகள் சாா்பில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் பொதுச் செயலா் ஜெய்சங்கா் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மின்வாரிய ஊழியா்கள் கலந்துகொண்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் மின்வாரிய உயா் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.

