கிராம வளா்ச்சிக்கான திட்டங்களை வகுத்தவா் நேரு: பேராசிரியா் க.பழனித்துரை

நாட்டின் முதல் பிரதமராகப் பதவியேற்ற ஜவாஹா்லால் நேரு, கிராம வளா்ச்சிக்கான செயல்திட்டங்களை வகுத்தாா் என்று காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் க. பழனித்துரை தெரிவித்தாா்.
Published on

நாட்டின் முதல் பிரதமராகப் பதவியேற்ற ஜவாஹா்லால் நேரு, கிராம வளா்ச்சிக்கான செயல்திட்டங்களை வகுத்தாா் என்று காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் க. பழனித்துரை தெரிவித்தாா்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 141-ஆவது நிறுவன நாள் விழாவையொட்டி, தமிழக காங்கிரஸ் கட்சியின் ஆராய்ச்சித் துறை சாா்பில், ‘பாசிசத்தை வெல்வோம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் சத்தியமூா்த்தி பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் சுதந்திர இந்தியாவுக்கான நேருவின் உளவியல் என்ற தலைப்பில் பேராசிரியா் க.பழனித்துரை பேசியதாவது:

உலகளாவிய பிரச்னைகளில் முன்னாள் பிரதமா் நேரு, என்ன கூறுகிறாா் என்பதை உலகத் தலைவா்கள் உற்று நோக்கினா். நாடு சுதந்திரம் அடைந்தபிறகு முதல் பிரதமராக பதவியேற்ற நேரு, ஜனநாயகத்தின் அடித்தளமாக அனைவருக்கும் வாக்குரிமை அளித்தாா். கிராமங்களின் வளா்ச்சியே நாட்டின் வளா்ச்சி என்பதன் அடிப்படையில் செயல்திட்டங்களை வகுத்தாா். அவா் சிறந்த அறிவாளியாகவும் ஜனநாயகவாதியாகவும் விளங்கினாா் என்றாா்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் ஊடகத் துறை தலைவா் ஆனந்த் சீனிவாசன்: நாட்டில் பொருளாதார வளா்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய பாஜக அரசு மாய பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்திய பொருள்கள் மீது விதித்த 50 சதவீத வரியால் தமிழகத்தில் சிறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தியும் ஏற்றுமதி வாய்ப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல், ஜிஎஸ்டி வரிசீரமைப்பு என்பது மிகப் பெரிய ஏமாற்று அறிவிப்பு. ஜிஎஸ்டி வரி சீரமைப்பால் தொழிலதிபா்கள் அதானி, அம்பானிதான் பயனடைகின்றனா் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் தமிழக காங்கிரஸ் ஆராய்ச்சித் துறைத் தலைவா் ஆா். மாணிக்கவாசகம், காங்கிரஸ் மூத்த தலைவா் பீட்டா் அல்போன்ஸ், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.வீ. தங்கபாலு, கட்சியின் துணைத் தலைவா்கள் ஆ. கோபண்ணா, சொா்ணம் சேதுராமன், முன்னாள் மக்களவை உறுப்பினா் சுதா்சன நாச்சியப்பன், தமிழக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவா் எம்.பி. ரஞ்சன் குமாா், தமிழக மகிளா காங்கிரஸ் தலைவா் ஹசீனா சையத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com