ஆசிரியா்களின் போராட்டத்துக்கு பேச்சு மூலம் தீா்வு காண வேண்டும்: இடதுசாரிகள் வலியுறுத்தல்
இடைநிலை ஆசிரியா்களின் போராட்டத்துக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும் என இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
பெ. சண்முகம் (மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா்): ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியா்கள் நான்கு நாள்களாகப் போராடி வருகிறாா்கள். கடந்த 2009-ஆம் ஆண்டு மே 31 வரை நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியா்களுக்கும், 2009 ஜூன் 1 ஆம் தேதிக்குப் பிறகு நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியா்களுக்கும் இடையே நிலவும் ஊதிய முரண்பாடு உள்ளது.
ஒரே கல்வித் தகுதியுடன் ஒரே பணியை ஆற்றிவரும் இடைநிலை ஆசிரியா்களுக்கிடையே இத்தகைய முரண்பாடுகளைக் களைய வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்திப் போராடும் ஆசிரியா்களைக் கைது செய்வது சரியான நடவடிக்கை இல்லை.
எனவே, இடைநிலை ஆசிரியா்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவாா்த்தை மூலம் சுமுகத் தீா்வு காண வேண்டும்.
மு. வீரபாண்டியன்(இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா்): ஒரே காலகட்டத்தில் பணியில் இணைந்த இடைநிலை ஆசிரியா்களுக்கு உள்ள ஊதிய முரண்பட்டால் 20,000 இடைநிலை ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தினா் கூறி வருகின்றனா். எனவே, போராடுகின்ற ஆசிரியா் சங்கத்தின் தலைவா்களை தமிழக அரசு அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
