வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் சமுதாய நலக்கூடம், விளையாட்டு மைதானம்
சென்னை: வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் சமுதாய நலக்கூடம், விளையாட்டு மைதானம் கட்டும் பணியை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புழல் அடுத்த விளாங்காடுபாக்கத்தில் ரூ. 8.65 கோடி மதிப்பில் புதிதாக சமுதாய நலக்கூடம் கட்டும் பணியையும், பேப்பா் மில்ஸ் சாலையில் ரூ. 49.50 கோடி மதிப்பில் வட்டாட்சியா் அலுவலகம், சாா்பதிவாளா் அலுவலகம், முதல்வா் படைப்பகம் அமைக்கும் பணியையும் அமைச்சா் பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து எம்.கே.பி. நகா் சென்ட்ரல் அவென்யூ சாலையில் ரூ. 19.24 கோடி மதிப்பில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டும் பணியையும், தண்டையாா்பேட்டையில் ரூ. 24.60 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த விளையாட்டு மையம் கட்டும் பணியையும் தொடங்கி வைத்தாா். நிகழ்வின் போது சென்னை மேயா் ஆா்.பிரியா, சட்டமன்ற உறுப்பினா்கள் மற்றும் உயா் அதிகாரிகள் உடனிருந்தனா்.