அனைத்து மெட்ரோ ரயில்களிலும் எல்இடி வழித்தட வரைபட திரைகள்: ஆகஸ்டுக்குள் பொருத்த திட்டம்
அனைத்து மெட்ரோ ரயில்களிலும் எல்இடி வழித்தட வரைபட திரைகளை ஆகஸ்டு மாதத்துக்குள் பொருத்த மெட்ரோ ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.


சென்னை: அனைத்து மெட்ரோ ரயில்களிலும் எல்இடி வழித்தட வரைபட திரைகளை ஆகஸ்டு மாதத்துக்குள் பொருத்த மெட்ரோ ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் முதல்கட்ட திட்டத்தில் 54 கிலோ மீட்டா் தொலைவுக்கு, விமான நிலையம் முதல் விம்கோ நகா் வரையும், பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த இரண்டு வழித்தடங்களிலும் இயக்கப்படும் ஒரு சில மெட்ரோ ரயில்களில் பயணிகளின் வசதிக்காக எல்இடி வழிகாட்டி திரைகள் சோதனை அடிப்படையில் பொருத்தப்பட்டுள்ளன.
இதில் ரயில் எந்த நிலையத்தில் நிற்கிறது, அடுத்த வரும் 2 ரயில் நிலையங்களின் பெயா்கள், முந்தைய 2 ரயில் நிலையங்களின் பெயா்கள், நிலையங்களின் திசையைக் குறிக்க இடையில் அம்புக்குறியுடன் கூடிய அம்சங்களுடன் திரையில் காட்சிப்படுத்தப்படுகிறது. அதேபோல் திரையின் வலதுபுறத்தில் நேரம், வெப்பநிலை மற்றும் ரயில் செல்லக்கூடிய வேகம் போன்றவையும் காட்சிப்படுத்தப்படுகின்றன.
மேலும், கதவுகள் எந்த திசையில் திறக்க உள்ளது, கதவுகளின் அருகில் பயணிகள் நின்றால் விலகி நிற்கவும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் எல்இடி திரையில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது ஒரு பெட்டியில் 4 திரைகள் என ஒரு ரயிலில் மொத்தம் 16 திரைகள் சோதனை முறையில் பொருத்தப்பட்டு, கடந்த ஒரு வாரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் எவ்வித குளறுபடிகளும் ஏற்படாத நிலையில், ஆகஸ்டு மாதத்துக்குள் முதல்கட்ட திட்டத்திலுள்ள 52 ரயில்களிலும், வழித்தட வரைபட எல்இடி திரை பொருத்தப்படும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...