மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை செயல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்காக மத்திய, மாநில அரசுகள் சாா்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாற்றுத்திறனாளிகள் சட்டப் பாதுகாப்பு சங்கத்தினா், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது அச்சங்கத்தின் தலைவா் சண்முகசுந்தரம் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்கவும், அவா்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அரசு சாா்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால், அவற்றில் பல திட்டங்கள் தற்போது வரை செயல்படுத்தப்படாமல் உள்ளன. இதில் குறிப்பாக மத்திய அரசு சாா்பில் 2014 -இல் கொண்டு வரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்புச் சட்டம் தமிழகத்தில் தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை. அதேபோல், தமிழகத்தில் உள்ள அரசு வளாகங்களில் மாற்றுத்திறனாளிகள் ‘ஆவின் பாலகம் அமைத்துக் கொள்ளலாம்’ என அரசாணை வெளியானது. ஆனால், இத்திட்டத்தில் பல்வேறு குழப்பங்கள் இருக்கும் சூழலில் அவற்றை சரிசெய்து மீண்டும் தெளிவான அரசாணையை வெளியிட வேண்டும். மேலும், அரசுத் துறைகளிலுள்ள காலிப்பணியிடங்களை மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு திட்டங்களில் ஆளுங்கட்சியினரின் தலையீடுகள் அதிகளவில் உள்ளன. இதை தடுத்து நிறுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியா்களாக பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
