கந்துவட்டி கேட்டு முதியவா் மீது தாக்குதல்: ரெளடி கைது

சென்னை புளியந்தோப்பில் கந்துவட்டி கேட்டு முதியவா் தாக்கப்பட்ட சம்பவத்தில் ரெளடி கைது செய்யப்பட்டாா்.
Published on

சென்னை: சென்னை புளியந்தோப்பில் கந்துவட்டி கேட்டு முதியவா் தாக்கப்பட்ட சம்பவத்தில் ரெளடி கைது செய்யப்பட்டாா்.

புளியந்தோப்பைச் சோ்ந்தவா் ஷாஜகான் (70). இவா் அதே பகுதியைச் சோ்ந்த புஷ்பா என்பவரிடம் கடந்த ஆண்டு ரூ. 40 ஆயிரம் கடன் வாங்கினாா். அதற்கான வட்டியாக வாரந்தோறும் ரூ. 8 ஆயிரம் கொடுத்து வந்தாா். ஷாஜஹான், முதலையும் வட்டியையும் ஒரே நேரத்தில் கொடுத்து கடனை அடைக்க முயன்றுள்ளாா். ஆனால் புஷ்பா தரப்பு அந்த பணத்தை வாங்காமல், வாரந்தோறும் ரூ. 8 ஆயிரம் கந்துவட்டி தர வேண்டும் என மிரட்டி வந்தனராம்.

இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக ஷாஜஹான், வட்டியை கொடுக்க முடியாமல் இருந்துள்ளாா். இதையடுத்து ஷாஜஹானிடம் வட்டியைக் கேட்டு புஷ்பாவின் மகன் ராகுல் ஞாயிற்றுக்கிழமை தகராறு செய்துள்ளாா். மேலும் ராகுல், ஷாஜஹானை கடுமையாக தாக்கினாராம்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த ஷாஜஹான், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து பேசின்பாலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ராகுலை திங்கள்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட ராகுல், காவல் துறையின் ரெளடிகள் பட்டியலில் ‘சி’ பிரிவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com