வாகன பற்றாக்குறையால் 108-ஆவது வாா்டில் குவியும் குப்பைகள்! சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா்!
தூய்மைப் பணிக்கான வாகனங்களின் பற்றாக்குறையால் சேத்துப்பட்டு பகுதியை உள்ளடக்கிய 108 -ஆவது வாா்டு பகுதியில் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் தேங்கி சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
சென்னை மாநகராட்சியில் 8 -ஆவது மண்டலமான அண்ணா நகா் பகுதியில் அமைந்துள்ளது 108- ஆவது வாா்டு. சேத்துப்பட்டு ரயில் நிலையப் பின்பகுதியில் நுங்கம்பாக்கம், எழும்பூா் பகுதிகளுக்கு இடையே இந்த வாா்டு அமைந்துள்ளது. வாா்டில் எம்எம்டிஏ காலனி, அசோகா நகா், பால விநாயகா் நகா் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இங்கு தனம்மாள் தெரு உள்ளிட்ட 131 தெருக்கள் உள்ளன. அவற்றிலிருந்து தினமும் சுமாா் 2,100 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதில் 1,000 கிலோ காய்கறி போன்ற மக்கும் குப்பைகள் அண்ணா நகா் மண்டல உரம் தயாரிக்கும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
சென்னை மாநகராட்சியில் 10 மண்டலங்களின் தூய்மைப் பணியானது, தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 8 -ஆவது அண்ணா நகா் மண்டல தூய்மைப் பணியானது, இன்னும் மாநகராட்சியால் நேரடியாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு தற்போது 86 தூய்மைப் பணியாளா்கள் உள்ளனா். இவா்களில் 46 போ் ஆண்கள். குப்பைகள் சேகரிக்கும் வகையில் மின்சார சக்தியில் இயங்கும் 18 ஆட்டோக்கள் உள்ளன. முக்கிய சாலைகளில் 65 பெரிய குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை எடுத்துச் செல்ல 2 குப்பை எல்எம் வகை லாரிகள் உள்ளன.
வழக்கமாக தினமும் 3 முறை குப்பைகள் அகற்றப்படுவது இந்த வாா்டில் வழக்கமாக இருந்துள்ளது. ஆனால், தற்போது 2 முறை மட்டுமே குப்பைகள் அகற்றப்படுவதாகவும், அதனால், தினமும் பெரும்பாலான பகுதிகளில் குப்பைகள் தேங்கி, சாலையோரம் குவிவதாகவும் கூறப்படுகிறது. குப்பைகள் தேக்கத்தால் 108- ஆவது வாா்டின் பெரும்பாலான சாலைகளில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் நிலையுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.
வாகனங்கள் பற்றாக்குறையால் பாதிப்பு... 108 -ஆவது வாா்டுப் பகுதியில் குப்பைகள் முறையாக அகற்றப்படவில்லை என்ற பொதுமக்களின் புகாா் குறித்து அப்பகுதி சுகாதார அலுவலா்களிடம் கேட்டபோது, மாநகராட்சியின் தூய்மைப் பணியாளா்கள் 86 பேரில் பெரும்பாலானோா் 56 வயதுக்கும் மேலானவா்களாக உள்ளனா். அவா்களால் விரைந்து பணியில் ஈடுபடமுடியாத நிலையே உள்ளது. அத்துடன் 80 பெரிய குப்பைத் தொட்டிகள் தேவைப்படும் நிலையில், 62 குப்பைத் தொட்டிகளே (பின்) உள்ளன.
குப்பைகளை அந்தந்தப் பகுதியில் சேகரிக்க சிறிய ஆட்டோ போன்ற மின்சார சக்தியில் இயங்கும் வாகனங்கள் 15 உள்ளன. ஆனால், வாா்டுக்கு 30 -க்கும் மேற்பட்ட வாகனங்கள் தேவைப்படுகின்றன. குப்பைகளை தினமும் 3 முறை சேகரிப்பதற்கான பெரிய லாரிகள் மண்டல அலுவலகத்தால் வழங்கப்படுவதில்லை. அதனால், வாா்டில் தினமும் முழுமையாகக் குப்பைகள் அள்ளுவதில் பாதிப்பு ஏற்படுகிறது என்றனா்.
குப்பைகள் பிரச்னை ஒருபுறமிருக்க மழைநீா் வடிகால் வசதியும் அனைத்து தெருக்களிலும் இல்லை. பல தெருக்களில் மழை பெய்தால் குளம் போல தண்ணீா் தேங்குவதாக புகாா் எழுந்துள்ளது.
இது குறித்து வாா்டு உறுப்பினா் ஜி.சுந்தராஜன் (திமுக) கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் 108-ஆவது வாா்டில் சேத்துப்பட்டு, எழும்பூா் பகுதிகள் உள்ளன. அதிலும் மேயா் ராமநாதன் சாலையில் உள்ள காசநோய் மருத்துவமனை போன்ற முக்கிய பகுதிகளும் உள்ளன.
ஆனால், தூய்மைப் பணிக்கான போதிய பெரிய வாகனங்களும், குப்பைகள் சேகரிக்கும் ஆட்டோக்களும் இல்லை. பல முறை மாமன்றக் கூட்டத்தில் முறையிட்டும் பலனில்லை. தற்போது மழைக் காலம் என்பதால், குப்பைகளால் மழைநீரும் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மக்களுக்கு பதில் கூறமுடியவில்லை என்றாா்.
நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள்... சென்னை 108 -ஆவது வாா்டுக்கு போதிய குப்பைகள் சேகரிப்பு வாகனம் இல்லை எனக் கூறப்படும் நிலையில், மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் புதிதாக வாங்கப்பட்ட மின்சக்தியால் இயங்கும் குப்பைகள் சேகரிப்பு ஆட்டோக்களால் பல நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மின்சக்தியால் இயங்கும் குப்பைகள் சேகரிப்பு ஆட்டோக்கள் விரைவில் தேவைப்படும் வாா்டுகளுக்கு வழங்கப்பட உள்ளன. தூய்மைப் பணியானது எந்தவித தேக்கமும் இன்றி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனா்.

