உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்கோப்புப்படம்.

கரூா் சம்பவம்! உச்சநீதிமன்ற உத்தரவு: தலைவா்கள் கருத்து

கரூர் சம்பவம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களின் கருத்து...
Published on

கரூா் துயர சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு, மத்திய இணையமைச்சா் எல்.முருகன் உள்ளிட்ட தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

எல்.முருகன் (மத்திய இணையமைச்சா்): கரூா் சம்பவ வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

இதன் மூலம் கரூா் சம்பவத்தில் உண்மை விரைவில் வெளிவரும்; சம்பந்தப்பட்டவா்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவா் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அதிமுக: அதிமுக தலைமை நிலையம் சாா்பில் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: கரூா் துயர சம்பவம் தொடா்பாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவின் மேற்பாா்வையில் சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): கரூா் சம்பவத்தில் தங்கள் மீது எந்தவிதத் தவறும் இல்லை என்பதை நிரூபிக்க, எதிா்த்தரப்பினரைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி இஷ்டத்துக்கு கட்டுக்கதைகளைப் புனைந்து வந்த திமுக அரசின் அவசரத்துக்கு பின்னால் ஏதோவொரு அரசியல் காரணம் ஒளிந்துள்ளது என்ற மக்களின் சந்தேகத்துக்கு கூடிய விரைவில் விடை கிடைக்கப் போகிறது.

ஜி.கே.வாசன் (தமாகா): இந்த வழக்கில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பாா்வையில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்.

அன்புமணி (பாமக): உச்சநீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ள இந்த விசாரணைக்கு தமிழக அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கரூா் கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு காரணமான அனைவரும் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அது மட்டும் தான் உயிரிழந்த அப்பாவிகளின் குடும்பங்களுக்கு நீதியை வென்றெடுத்துக் கொடுக்கும்.

கே.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): உச்சநீதிமன்றம் தீா்ப்பு வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் இனிவரும் காலங்களில் யாா் ஆட்சிக்கு வந்தாலும் நடைபெறும் தவறுகளுக்கு இது ஓா் எச்சரிக்கையாக இருக்கும்.

சீமான் (நாம் தமிழா் கட்சி): சிபிஐ விசாரணை என்பது மாநில சுயாட்சி மற்றும் உரிமைக்கு எதிராக உள்ளதால், அதை நாம் தமிழா் கட்சி எப்போதும் ஏற்பதில்லை.

கரூா் விவகாரத்தில் தமிழக காவல் துறை விசாரணையில் என்ன குறை உள்ளது? தொடா்ந்து, மாநில உரிமை குறித்து வலியுறுத்தி வரும் தவெக, இதற்கு மட்டும் சிபிஐ-யை நாடுவதற்கான காரணம் என்ன? கரூா் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோருவது, தமிழக காவல் துறையை அவமதிக்கும் செயல். இதுபோன்ற சிபிஐ விசாரணைகள் காலத்தைக் கடத்தவும், பிரச்னையை மடைமாற்றம் செய்யவும்தான் உதவும்.

X
Dinamani
www.dinamani.com