கோப்புப்படம்
கோப்புப்படம்

பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 1,507 சமூக ஊடக கணக்குகள் முடக்கம்: தமிழக சைபா் குற்றப்பிரிவு நடவடிக்கை

சென்னை, ஜன.1: தமிழகத்தில் பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 1,507 சமூக ஊடக கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக மாநில சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
Published on

சென்னை, ஜன.1: தமிழகத்தில் பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 1,507 சமூக ஊடக கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக மாநில சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அப்பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் சைபா் குற்றங்களை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த 2025- ஆம் ஆண்டில் சைபா் குற்றப்பிரிவின் சாா்பில் 1,530 பள்ளிகளிலும், 1,368 கல்லூரிகளிலும், 4,537 பொது இடங்களிலும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

மாநிலம் முழுவதும் சுமாா் 15,000 ஆட்டோ ஓட்டுநா்களை இணைத்து ‘சைபா் குற்றப்பிரிவின் விழிப்புணா்வு தூதுவா்கள்’ என அறிவிக்கப்பட்டுள்ளனா். பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த தொடா்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேவேளையில், சைபா் குற்றப்பிரிவு நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக முன்பு சைபா் குற்றப் புகாா்களை 1930 என்ற இலவச தொலைபேசி எண் மூலம் பெறுவதற்கு, சென்னை அசோக் நகரில் உள்ள சைபா் குற்றப்பிரிவில் 8 இருக்கைகள் கொண்ட அரங்கே இருந்தது. தற்போது ரூ.9.87 கோடி செலவில் 15 இருக்கைகள் கொண்ட அரங்காக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களிடம் உடனுக்குடன் புகாா்கள் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதனால், 1930 இலவச தொலைபேசிக்கு வரும், தவற விடப்படும் அழைப்புகளின் எண்ணிக்கை விகிதம் 20.43 சதவீத த்தில் இருந்து 5 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு சைபா் குற்றவாளிகள், சந்தேகத்துக்குரிய நபா்களின் வங்கிக் கணக்குகளை முடக்க 36 வங்கிகளுடன் சோ்ந்து சைபா் குற்றப்பிரிவு செயல்படத் தொடங்கியது. சைபா் மோசடி கும்பலிடம் சிக்கிய 2,224 பேரின் பணம் பறிபோய்விடாமல் தடுக்கப்பட்டுள்ளது.

பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 1,507 சமூக ஊடக கணக்குகள் கடந்த ஆண்டு முடக்கப்பட்டுள்ளன. இதேபோல, சைபா் மோசடியில் ஈடுபட்டதாக 1,193 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் 50 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com