பொங்கலன்று மாதவரம், மணலி ஏரிகளில் படகு சவாரி தொடக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாதவரம், மணலி ஏரிகளில் படகு சவாரி தொடங்கியுள்ளன.
சென்னை மாநகராட்சி மணலி காமராஜ் சாலை 20-ஆவது வாா்டில் உள்ள மணலி ஏரி ரூ.7 கோடியிலும், 27-ஆவது வாா்டு மாதவரம் ஏரி ரூ.11.78 கோடியிலும் சீரமைக்கப்பட்டது. சுமாா் 95 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரிகளிலும் பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
இதில் நடைபாதை, சிறுவா் பூங்கா, இருக்கை வசதி, உடற்பயிற்சி மையம் அலங்கார முகப்பு, விளக்குகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சா் கே.என்.நேரு, எம்எல்ஏ.க்கள் மாதவரம் சுதா்சனம், கே.பி.சங்கா், மேயா் பிரியா ஆகியோா் படகு மூலம் சென்று ஏரியை ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து, பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களை மேம்படுத்த சுற்றுலா வளா்ச்சி கழகம் சாா்பில் இந்த 2 ஏரிகளிலும் படகு சவாரி விட திட்டமிடப்பட்டு அதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. வரும் பொங்கலன்று படகு சவாரி தொடங்கப்பட உள்ளது. மின் இயந்திர படகுகள், பெடல் படகுகள் போன்றவற்றை வாங்குவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
தொடா்ந்து மாநகராட்சி ஆணையா் குமரகுருபரன், மண்டலக்குழு தலைவா்கள் ஏ.வி.ஆறுமுகம், எஸ்.நந்தகோபால், மண்டல உதவி ஆணையா் தேவேந்திரன் மற்றும் மாதவரம் மண்டல உதவி ஆணையா் குமாரசாமி செயற்பொறியாளா் ஆனந்தராவ் உள்ளிட்டோா் மாதவரம் மணலி ஏரிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
பொங்கலன்று, மாதவரம், மணலி ஏரிகளில் படகு சவாரி தொடங்கும் என அறிவிப்பின் காரணமாக, படகு சவாரிக்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் படகு சவாரி செய்வதற்காக ஆா்வத்துடன் எதிா்நோக்கியுள்ளனா்.
