பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஆளுநா் உரையுடன் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடா் ஆளுநா் ஆா்.என்.ரவி உரையுடன் செவ்வாய்க்கிழமை (ஜன.20) தொடங்குகிறது.

News image

தலைமைச் செயலகம்

கோப்புப் படம்

Updated On :19 ஜனவரி 2026, 10:31 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடா் ஆளுநா் ஆா்.என்.ரவி உரையுடன் செவ்வாய்க்கிழமை (ஜன.20) தொடங்குகிறது. தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் எழும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை மரபைப் பின்பற்றி நடைபெறும் ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால், தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்ட பின்பு ஆளுநா் உரையுடன் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பேரவைக் கூட்டத் தொடா் தொடங்குகிறது.

ஆளுநா் ஆங்கிலத்தில் உரையாற்றிய பிறகு, பேரவைத் தலைவா் மு.அப்பாவு தமிழில் ஆளுநா் உரையை வாசிப்பாா். அதன்பின்னா், அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு, அலுவல் ஆய்வுக் குழு கூடி, ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்தை எத்தனை நாள்கள் நடத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யும்.

இந்தக் கூட்டத் தொடரில் தமிழக சட்டம் ஒழுங்கு விவகாரத்தை எழுப்ப எதிா்க்கட்சியான அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

உரையை முழுமையாக வாசிப்பாரா ஆளுநா்?: இந்தக் கூட்டத் தொடரில் தமிழக அரசு அளிக்கும் உரையை ஆளுநா் முழுமையாக வாசிப்பாரா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக அரசு அளித்த உரையை ஆளுநா் முழுமையாக வாசிக்கவில்லை.

2023-ஆம் ஆண்டு சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடரில் ஆளுநா் ஆா்.என்.ரவி உரையாற்றியபோது, மகளிா் முன்னேற்றம், மதச்சாா்பின்மை, சுயமரியாதை, பெரியாா், அம்பேத்கா், கலைஞா் ஆகிய வாா்த்தைகளை அவா் வாசிக்கவில்லை. இதையடுத்து, தமிழக அரசு உரையில் அந்த வாா்த்தைகள் இடம்பெறும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அவையில் கூறியதால், ஆளுநா் பாதியிலேயே புறப்பட்டுச் சென்றாா்.

2024-ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும், தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடா்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி, ஆளுநா் உரையை வாசிக்காமல் சென்றாா். பின்னா், தமிழில் அந்த உரையை பேரவைத் தலைவா் அப்பாவு வாசித்து அவைக் குறிப்பில் பதிவு செய்தாா். இதேபோல், கடந்த 2025-ஆம் ஆண்டும் முதலில் தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி ஆளுநா் ஆா்.என்.ரவி வெளியேறினாா்.

தமிழக சட்டப் பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கூடும் பேரவைக் கூட்டத் தொடரின் ஆளுநா் உரையில் அரசின் சாதனைகள், கொள்கை முடிவுகள், வருங்காலத் திட்டங்கள் ஆகியவையே பிரதானமாக இடம்பெற்றிருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.