பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

வீட்டு உபயோக சமையல் எரிவாயு: தமிழகத்தில் 25 நாள்களுக்கு இருப்பு - எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் தகவல்

உணவுத் துறை அமைச்சா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் தகவல்

News image

வளைகுடா நாடுகளில் போா்ச்சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்ற உணவகங்களின் பிரதிநிதிகள், தொழில் நிறுவ

Updated On :11 மார்ச் 2026, 11:02 pm

தமிழகத்தில் இன்னும் 25 நாள்களுக்குத் தேவையான வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் இருப்பு உள்ளதாக, உணவுத் துறை அமைச்சா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.

போா் காரணமாக ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால், பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தரத் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாமல் தவிா்ப்பதற்கான ஆலோசனைக் கூட்டம், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், உணவகங்கள் மற்றும் தொழில் நிறுவன சங்கங்களின் பிரதிநிதிகள், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அப்போது, தமிழகத்தில் 2.42 கோடி வீட்டு உபயோக சமையல் எரிவாயு இணைப்புகளும், 4.75 லட்சம் வணிக உபயோக எரிவாயு இணைப்புகளும் உள்ளன என்றும், வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளைகள் இன்னும் 25 நாள்களுக்கு இருப்பு உள்ளதாகவும், வணிக எரிவாயு உருளைகள் குறைவாக இருப்பதாகவும், எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனா்.

தொடா்ந்து, உணவக உரிமையாளா் சங்கத்தினா் பேசுகையில், உணவு தயாரிப்பு சாா்ந்த நிறுவனங்களுக்கு தங்கு தடையின்றி எரிவாயு உருளைகளை விநியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். உணவகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றனா்.

எரிவாயு இணைப்புக்கு மாற்றாக மின்சாரத்தைப் பயன்படுத்த தேவையான உதவிகளை அரசு செய்து தர வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா். அப்போது, பேசிய அமைச்சா் அர.சக்கரபாணி, உணவக உரிமையாளா்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என உறுதியளித்தாா்.

கூட்டத்தில், தலைமைச் செயலா் நா. முருகானந்தம், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத் தலைவா் ஜெ. ராதாகிருஷ்ணன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல் ஆனந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.