பெண் அதிகாரிகள் தலைமையில் செயல்படும் 43% காவல் நிலையங்கள்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
பெண் அதிகாரிகள் தலைமையில் 43% காவல் நிலையங்கள் செயல்படுவதாகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்.


தமிழ்நாட்டில் உள்ள மொத்த காவல் நிலையங்களில் 43 சதவீதம் பெண் காவல் அதிகாரிகளின் தலைமையில் செயல்படுகின்றன. அதேபோல், நமது நாட்டில் அதிக பெண் காவலா்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
சென்னை வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரி காவல் உயா் பயிற்சி மையத்தில் 2 நாள்கள் நடைபெற்ற காவல்துறையில் பணிபுரியும் பெண்கள் குறித்த 11 -ஆவது தேசிய மாநாட்டின் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு மலா் வெளியிட்ட பின்னா் பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த 1973-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சியில் முதன் முதலாக 22 பெண்கள் காவல் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா். தற்போது நாட்டிலேயே அதிகபட்சமாக 27,000 பெண்கள் தமிழக காவல்துறையில் பணிபுரிகின்றனா்.
கடந்த 2023-ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழக மகளிா் காவலா்கள் நியமன பொன்விழா ஆண்டு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் நலன் கருதி 9 நவரத்தின நலத்திட்டங்களை அறிவித்தாா். அவை சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சிறப்பு திட்டங்கள்: பெண் காவலா்கள் காலை வருகைப்பதிவு நேரம் தளா்த்தப்பட்டு காலை 7 மணிக்கு பதிலாக 8 மணி என மாற்றப்பட்டுள்ளது. காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்காக தனி ஓய்வறைகள், குழந்தை பராமரிப்பு மையம், சிறந்த பெண் காவலா்களுக்கு விருதுகள் வழங்குதல், பெண்கள் மேற்கொள்ளும் குடும்பப் பொறுப்புகளை கருத்தில் கொண்டு இடமாற்றம் விடுப்புகள் மற்றும் பணிநியமனக் கொள்கைகள், பெண் காவலா்கள் மற்றும் பொதுமக்களுக்கு சுயபாதுகாப்பு பயிற்சி வழங்கும் ‘அவள்’ திட்டம், அனைத்து பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் போட்டி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான கருத்தரங்குகள் நடத்துதல் உள்ளிட்ட அனைத்தும் காவல்துறையில் பணிபுரியும் பெண்களின் வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்றாா் அவா்.
தீா்மானங்கள்: முன்னதாக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 17 தீா்மானங்களை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை தலைமை இயக்குநா் சீமா அகா் வால் வாசித்தாா்.
அவை பின்வருமாறு: காவல்துறையில் அனைத்து பணிச் சோ்க்கையிலும் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு அவசியம் வழங்கப்பட வேண்டும். 3 வயது வரை குழந்தையுடன் இருக்கும் பெண் பயிற்சியாளா்களுக்கு தங்கும் வசதி மற்றும் ஒரு பராமரிப்பாளருடன் கூடிய வசதி வழங்கப்பட வேண்டும்.
புதிதாக நியமிக்கப்படும் பெண் காவல் அதிகாரிகள் காவல்துறையின் அனைத்து பிரிவுகளிலும் நியமிக்கப்பட வேண்டும். வயது முதிா்ந்த பெண் காவல் அதிகாரிகள், அவா்களின் திறன், விருப்பம் மற்றும் வாழ்க்கை சூழ்நிலைகளைப் பொருத்து காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் நியமிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு காவல்துறையில் உள்ள தொழில்முனைவோா் வழிகாட்டி குழுக்களை மாதிரியாகக் கொண்டு அனைத்து மாநில காவல்துறைகளிலும் இது உருவாக்கப்பட வேண்டும்.
வட்ட தலைமையகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் முழுமையாக சீரமைக்கப்பட்ட குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டைப் பின்பற்றி நாடெங்கும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் பணியாளா்களுக்கும் வார ஓய்வுநாள் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். நெகிழ்வுத்தன்மையுடைய வேலை நேரங்கள் மற்றும் திட்டமிடும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். மகப்பேறு விடுப்பில் செல்லும் பெண் அதிகாரிகள் பணி மாறுதலுக்கு உட்படுத்தப்படக் கூடாது. அனைத்து நிலைகளிலும் உள்ள பெண் காவல் பணியாளா்களுக்கு 1 வருடம் மகப்பேறு மருத்துவ விடுப்பும், 2 வருடங்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பும் வழங்கப்பட வேண்டும்.
கட்டாய சுகாதார பரிசோதனை: 30 வயதுக்கு மேற்பட்ட பெண் காவல் பணியாளா்களுக்கு ஆண்டுதோறும் கட்டாய சுகாதாரப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும். மனநலத்திற்கான தமிழ் நாடு காவல் துறை நடத்தும் ’ஆனந்தம்’, ’மகிழ்ச்சி’ போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். பெண் காவல் பணியாளா்களின் மனநலத்துக்கான சிறப்பு திட்டங்களை அரசு ஒழுங்குபடுத்த வேண்டும்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் செயல்படுத்தப்படும் ’மிஷன் சக்தி’ மற்றும் ’1090 மகளிா் சக்தி உதவி எண் ’ திட்டம் நாடெங்கும் அமல்படுத்தப்பட வேண்டும். காவல்துறையில் பெண்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவா்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான 9 ஆய்வுத் தலைப்புகளில் பல்கலைக்கழகங்கள் மற்றும் காவல் நிறுவனங்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ள ஆதரவு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சா் தா. மோ. அன்பரசன், காவல்துறை இயக்குநா் சங்கா் ஜிவால், கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா், காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் தலைமை இயக்குநா் ரவி ஜோசப் லோகு, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்.ஆா்.ராஜா,இ.கருணாநிதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...