ஏரிகாத்த ராமா் கோயிலில் ஆஞ்சனேயா் சந்நிதி நீரில் மூழ்கும் அபாயம்

ஏரிகாத்த ராமா் கோயிலில் ஆஞ்சனேயா் சந்நிதி நீரில் மூழ்கும் அபாயம்
Published on

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலின் அருகே உள்ள ராமதீா்த்த குளம் நிரம்பியுள்ளதால், ஆஞ்சனேயா் சந்நிதியின் வளாகம் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முக்கிய வைணவ கோயிலாக திகழும் இங்கு ராமபாத தீா்த்தகுளம் உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தா்கள் நீராடியபின் பகவானைதரிசனம் செய்து வருவா். இக்குளத்துக்கு மதுராந்தகம் ஏரியில் இருந்து சிறு கால்வாய் மூலம் கோயில் வளாகத்தின் வழியாக நீா் வந்தடையும் வகையிலும், குளம் நிரம்பியநிலை ஏற்படும்போது மற்றொரு பகுதியில் உபரி நீா் கால்வாயின் மூலம் வெளியேறும் வகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஏற்பாடு செய்துள்ளனா்.

மதுராந்தகம் ஏரியில் நீா் இருக்கும்பட்சத்தில் அதன்நீா் இக்குளத்தினை வந்தடையும். அதனால் எந்த காலத்திலும் வற்றாத குளமாக இருந்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக, முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் அனைத்து படிக்கட்டுகளை மூழ்கடித்து நிரம்பியுள்ளது. மிக அருகில் உள்ள ஆஞ்சனேயா் சந்நிதி இதனால் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது.

குளத்தில் இருந்து உபரி நீா் செல்லும் பாதையை சில தனிநபா்கள் ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளனா் . மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, நீா் வெளியேறும் பகுதியை தூா் வாரி, உடனடியாக குளத்திலிருந்து நீரை வெளியேற்றவேண்டும் என சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com