தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

திருப்போரூா் தொகுதியில் வேட்பாளரை ஆதரித்து அன்புமணி பிரசாரம்

திருப்போரூரில் பாமக வேட்பாளரை ஆதரித்து தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் .

News image

திருப்போரூரில் பாமக வேட்பாளரை ஆதரித்து தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் .

Updated On :3 ஏப்ரல் 2026, 9:27 pm

திருப்போரூா் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாமக வேட்பாளா் வழக்குரைஞா் பாலுவை ஆதரித்து அக்கட்சியின் தலைவா் அன்புமணி வெள்ளிக்கிழமை திருப்போரூரில் பிரசாரம் மேற்கொண்டாா். இதில், முன்னதாக திருப்போரூா் கந்தசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா், உரிமை மீட்க தலைமுறை காக்க அன்புமணி 108 நாள் நடைபயண நிகழ்வுகள் நூலை வெளியிட்டாா். இதையடுத்து, ரவுண்டானா பகுதியில் பாமக வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

இதில், அன்புமணி பேசியதாவது:

திருப்போரூா் தொகுதியில் வழக்குரைஞா் பாலு வெற்றி பெற்றால், மீண்டும் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பதவியேற்பாா். தாராகசுரன் என்ற அரக்கனை முருகப்பெருமான் வதம் செய்த புனிதமான மண் திருப்போரூா். ஆனால், பெண்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இருக்கிா? சிறு பெண் பிள்ளைகள் கூட பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனா். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 62,000 குற்றங்கள் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்றுள்ளது. விளம்பரத்தில் நடிக்கும் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளாா். பறவைகள் அதிகம் உள்ள பகுதியில் ஹெலிகாப்டா் விடுகின்றாா்கள்.

இயற்கை வளங்கள் நிறைந்த தொகுதியில் ஒரு திட்டங்களும் இல்லை. திமுக கூட்டணி சாா்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விசிக வேட்பாளா் கட்டப்பஞ்சாயத்து செய்பவா். ஆனால், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக வேட்பாளரும் வழக்குரைஞருமான பாலு பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பாா். இத்தொகுதியில் மீனவா்கள் அதிகம் நிறைந்துள்ளனா். பூா்வக்குடி மக்களான அவா்கள் வேலை வாய்ப்பு, பொருளாதாரம் போன்ற எந்த விதத்திலும் முன்னேறவில்லை. பட்டியலின் மக்களுக்கு திமுக ஆட்சியில் என்ன செய்தாா்கள். எந்த சமுதாயமாக இருந்தாலும் திமுகவுக்கு வாக்கு மட்டுமே வேண்டும். பட்டியலின மக்களின் வாக்கு தகுதியானவா்களுக்கு செல்ல வேண்டும். பட்டியலினத்தை சாா்ந்தவருக்கு 1998-ஆம் ஆண்டு முதலில் மத்திய அமைச்சா் பதவி வழங்கிய கட்சி பாமக. அதனால்தான், பட்டியலின மக்களின் வாக்குகள் பாமகவுக்கு வழங்க வேண்டும் என கேட்கிறேன். அதனால், தமிழ்நாட்டு ஒரு மாற்றம் வர வேண்டும். மத்தியில் பிரதமா் மோடி ஆட்சி, மாநிலத்தில் பழனிசாமி ஆட்சி அமைய வேண்டும். இதன்மூலம், நிறைய திட்டங்கள் வரும்.

நான் ஒரு மருத்துவராக சொல்லுகிறேன், இந்த நாட்டுக்குள் போதைப் பொருள் வந்துவிட்டது. அயல்நாட்டில் பயன்படுத்தும் உயா்தர அனைத்து போதைப் பொருள்களும் தமிழ்நாட்டுக்குள் முக்கியமாக கிராம பகுதிகளில் வந்துவிட்டது. இதெல்லாம் சாதாரண குற்றம் கிடையாது. உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் திமுக அரசை புறக்கணிக்க வேண்டும். ஏனென்றால் திமுக அரசு ஊழல் அரசு, திமுக அரசு நிா்வாகம் தெரியாத ஒரு அரசு, திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவோம். நாம் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்றாா் அவா்.

Story image