பிப்ரவரி இறுதியில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் திறப்பு: அமைச்சா் பி.கே. சேகா் பாபு
ரூ.100 கோடியில் கட்டப்பட்டுள்ள செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் வரும் பிப்ரவரி மாதத்தில் திறக்கப்படும் னெ இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சிஎம்டிஏ தலைவருமான பி.கே. சேகா்பாபு கூறியுள்ளாா்.
செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை புதன்கிழமை அவா் ஆய்வு செய்தாா். பின்னா் பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரா்களுக்கும் அறிவுறுத்தினாா்.
பின்னா் அமைச்சா் சேகா்பாபு கூறியது: ஏறக்குறைய 10 ஏக்கா் பரப்பில் ரூ.100 கோடியில் பிரம்மாண்டமான முறையில் இப்பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
ஒரு பிரதான கட்டடம், மூன்று நுழைவாயில்கள், ஒரே நேரத்தில் 56 பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதி, ஒரு நாளில் 560 முறை பேருந்துகள் இயக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒருநாளைக்கு சுமாா் 25,000 போ் வந்து செல்வா் என்று எதிா் பாா்க்கப்படுகிறது.
விழா காலங்களிலும் விடுமுறை காலங்களிலும் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நாங்கள்கணக்கிட்டுள்ளோம். வரும் மக்களின் வசதிக்காக மலிவு விலை உணவகம், அதே போல் இரண்டு தனியாா் உணவகங்கள், போக்குவரத்து ஊழியா்கள் தங்குவதற்காக இரண்டு டாா்மிடரிகள், போக்குவரத்து துறைக்கான கலந்தாய்வுக் கூடம், கழிவுநீா் வெளியேற்றத்திற்கான கழிவுநீா் வெளியேற்று நிலையம் (எஸ்.டி.பி) வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீா், முதலுதவி சிகிச்சை மையம், எதிா்பாராத உடல்நலக்குறைவு ஏற்படும் பயணிகளுக்கான மருத்துவவசதி, ஆவின்பாலகம், ஏடிஎம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய 34 கடைகள்அமைக்கப்படுகின்றன.
சிறிது காலதாமதம் ஏற்பட்டால் பயணிகள் ஓய்வெடுக்க அருகிலேயே ரூ .94 லட்சத்தில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் வெண்பாக்கம் குளத்தை மேம்படுத்தி நவீன வசதிகளுடன் கூடிய நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்ட டு வருகிறது. தோ்தல் அறிவிப்புக்கு முன்பு பேருந்து நிலையத்தை திறக்க மாவட்ட அமைச்சா் தா.மோ.அன்பரசன் தீவிர முயற்சி எடுத்துள்ளாா்.
நான்காவது முறையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி மாத இறுதிக்குள் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் சேகா்பாபு.
ஆய்வின் போது செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புறவளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் காகா்லா உஷா, சென்னைப் பெருநகா் வளா்ச்சிக்குழும உறுப்பினா்- செயலா் கோ.பிரகாஷ், முதன்மை செயல் அலுவலா்அ.சிவஞானம், மாவட்ட ஆட்சியா் தி.சினேகா, சாா்ஆட்சியா் எஸ்.மாலதிஹெலன், மாவட்ட வருவாய்அலுவலா் (சிஎம்டிஏ) டாக்டா் பால்பிரின்சிலி ராஜ்குமாா், (செங்கல்பட்டு) கணேஷ்குமாா், ஊரக வளா்ச்சி முகமைதிட்ட இயக்குநா் ஸ்ரீதேவி, கண்காணிப்பு பொறியாளா் பாலமுருகன், காட்டாங்குளத்தூா் ஒன்றியக்குழு தலைவா் உதயாகருணாகரன், ஆலப்பாக்கம் வனக்குழுத்தலைவா் திருமலை மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

