டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

"அதிகாரிகளின் வீட்டு வேலையில் துறைமுகப் பணியாளர்கள்'

சென்னைத் துறைமுகத்தில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் (மஸ்தூர் பிரிவு) துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் உள்ளிட்டோரின் வீடுகளில்...

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:20 am

முகவை க.சிவக்குமார்

 திருவொற்றியூர், ஆக. 13:     சென்னைத் துறைமுகத்தில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் (மஸ்தூர் பிரிவு) துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் உள்ளிட்டோரின் வீடுகளில் வேலை பார்த்து வரும் தகவல் வெளியாகி உள்ளது.

சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் சட்ட விரோதமாகப் பணியில் உள்ளதாக தொழிலாளர்கள் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. இதையடுத்து, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் டி.சதீஷ்குமார் (ஐ.பி.எண். 2660) என்ற பணியாளரின் பணி விவரங்கள் குறித்து தகவல்கள் கேட்கப்பட்டன.

""அவர் 06.05.2005 முதல் ஸ்டோர்ஸ் பிரிவில் வேலை செய்து வருகிறார்'' என பதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சதீஷ்குமார் வேலை செய்து வரும் இப்பிரிவில் விசாரித்தபோது அங்கு வேலை செய்ததற்கான வருகைப் பதிவேடு ஏதும் இல்லை. வேலையில் சேர்ந்ததாகக் கூறப்பட்ட தேதியிலிருந்து அவரை யாரும் அங்கு பார்க்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஆனால், தனியாக ஒரு "மஸ்டர் ரோல் ஃபாரம்' நிரப்பி அதில் கணக்கு அதிகாரி உள்ளிட்டோர் பரிந்துரை செய்து சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் கூட மாதம் முழுவதும் எவ்வித விடுப்பும் இன்றி 31 நாள்களும் 5 மணி நேரம் கூடுதலாக வேலை செய்ததாகக் காட்டப்பட்டு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் வேடிக்கை என்னவெனில், கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நாளில் கூட இவருக்கு வழக்கமான சம்பளத்துடன் 5 மணி நேரம் கூடுதல் வேலை செய்ததாக பணம் பட்டுவாடா செய்யபட்டுள்ளதை ஆதாரங்களுடன் காண முடிந்தது.

விசாரித்துப் பார்த்ததில் அவர் சென்னையிலேயே வேலையில் இல்லை எனவும், பெங்களூருவில் உள்ள துறைமுக உயர் அதிகாரியின் உறவினர் வீட்டில் வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஒரே அதிகாரி வீட்டில் 30 பணியாளர்கள்: இது குறித்து சென்னைத் துறைமுக பாரத் மஸ்தூர் சங்க பொதுச் செயலாளர் ஆர்.சந்தானம் கூறியது,

நாங்கள் இப்போது கூறியுள்ளது போன்று ஏராளமான பணியாளர்கள் துறைமுக உயர் அதிகாரிகளின் வீடுகளில் வேலை செய்து வருகின்றனர்.

ஒரேயொரு உயர் அதிகாரியின் வீட்டில் மட்டும் 15 பெண்கள் உள்ளிட்ட 30 பணியாளர்கள் வேலை செய்துள்ளனர் என்றால்தான் இந்த துஷ்பிரயோகங்களை அறிய முடியும். அந்த அதிகாரி யார் என்பது துறைமுகத்தில் அனைவருக்கும் தெரியும்.

அவர்களுக்கு 31 நாள்களும் 5 மணி நேரம் கூடுதல் வேலை செய்ததாக இரு மடங்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையாக துறைமுகத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்படுவதில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் நிதிப் பற்றாக்குறை உள்ளதாகக் கூறுகின்றனர்.

தனது சொந்த வேலைகளுக்கு பணியாளர்கள் வைத்துக் கொள்ள எவ்வித அதிகாரமும் வழங்கப்படாத நிலையில் இது போன்ற துஷ்பிரயோகங்களை விரிவாக விசாரணை செய்து தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இது தொடர்கதையாக மாறும்' என்றார் சந்தானம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.