டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பயிர் காப்பீடு: விவசாயிகளின் பங்கேற்பு அதிகரிப்பு

சென்னை, செப். 8:     பயிர் காப்பீடு குறித்த விழிப்புணர்வு விவசாயிகளிடம் பெருகி வருகிறது. இதனால் அத்திட்டத்தில் இணையும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:28 pm

வி.தேவதாசன்

சென்னை, செப். 8:     பயிர் காப்பீடு குறித்த விழிப்புணர்வு விவசாயிகளிடம் பெருகி வருகிறது. இதனால் அத்திட்டத்தில் இணையும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் பயிர் காப்பீடு வழங்கி வருகிறது. வெள்ளம், வறட்சி, பூச்சித் தாக்குதல் போன்ற இயற்கை இடர்ப்பாடுகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் இழப்பீடு அளிக்கப்படுகிறது.

முக்கிய பயிர் வகைகளுக்கு 1985-ம் ஆண்டு முதல் பயிர் காப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் இத்திட்டம் பெருமளவில் விவசாயிகளைச் சென்றடையவில்லை.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட மழை வெள்ளம், குறிப்பாக கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் ""நிஷா'' புயல் ஏற்படுத்திய பாதிப்புகளால் இப்போது பயிர் காப்பீடு குறித்த விழிப்புணர்வு விவசாயிகளிடம் பெருகியுள்ளது.

இது குறித்து இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் மண்டல மேலாளர் சி. அன்பரசு கூறியதாவது:

"கர்நாடகத்தில் நெல் நடவு முடித்தவுடன், விவசாயிகள் வங்கிகளுக்குச் சென்று பயிர் காப்பீட்டுக்கான சந்தா (பிரிமியம்) தொகையை, மிக நீண்ட வரிசைகளில் காத்திருந்து செலுத்துவதை காணலாம். அந்த அளவுக்கு அங்கு விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

அதேபோன்ற விழிப்புணர்வு தமிழக விவசாயிகள் மத்தியிலும் வேகமாக பரவி வருவதை இப்போது நாங்கள் கண்கூடாக அறிகிறோம். எங்கள் நிறுவனம் சார்பில் "வர்ஷ பீமா' என்ற மழை காப்பீட்டுத் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறோம்.

சாகுபடி காலத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவைவிட கூடுதலாக பெய்தாலோ அல்லது குறைவாக பெய்தாலோ, இத்திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கும்.

இந்த திட்டத்தில் 2008-ம் ஆண்டில் வெறும் 289 விவசாயிகளே சேர்ந்தனர். ஆனால் 2009-ல் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர். இது விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வையே காட்டுகிறது.

சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், நடவு செய்த 30 நாட்களுக்குள் சந்தா தொகையை வங்கிகளில் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்ட கணக்கில் செலுத்த வேண்டும். ஏக்கருக்கு ரூ.556 சந்தா செலுத்தினால், அதிகபட்சம் ரூ.19 ஆயிரத்து 336 வரை இழப்பீடு பெறலாம்.

விவசாயிகளிடம் இருந்து வங்கி அலுவலர்கள் உத்தரவாத மகசூலுக்கு மட்டும் சந்தாத் தொகை பெறாமல், அதிகபட்ச சந்தாத் தொகையைப் (ரூ.556) பெற முனைப்பு காட்ட வேண்டும். இதன் மூலமே விவசாயிகளுக்கு அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தர முடியும் என்றார்.

இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு சந்தாத் தொகை செலுத்துவதற்கான கடைசி தேதி 15.12.2009 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என்றார் அன்பரசு.

தமிழகத்தைப் பொருத்தமட்டில், பயிர் காப்பீடாக 2006-ம் ஆண்டு வரை ஒரு ஆண்டில் வழங்கப்பட்ட அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை ரூ.50 கோடிக்கும் குறைவாகவே இருந்தது. 2007-ம் ஆண்டில் அத்தொகை ரூ.280 கோடியாக அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ""நிஷா'' புயல் பாதிப்பைத் தொடர்ந்து, கடந்த ஆண்டுக்கான இழப்பீடாக ரூ.651 கோடியே 66 லட்சம் மிக விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டு, பெரும்பாலான விவசாயிகள் நஷ்டமடைந்தனர். இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கான முதலீடு கிடைக்காமல் பலர் சோர்ந்திருந்தனர்.

இந்நிலையில் இம்மாத இறுதிக்குள் பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்கப் போகிறது என்ற செய்தி விவசாயிகளிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த ஆண்டு பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணையாத விவசாயிகளிடமும், "இனி பயிர் காப்பீடு அவசியம் தேவை' என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.