டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சட்ட மேலவை: வாக்குரிமை இல்லாத தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்

சென்னை, ஜூன் 26: தமிழகத்தில் விரைவில் சட்ட மேலவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், இத்தேர்தலில் ஆசிரியர் தொகுதிகள் இருந்தும், வாக்களிக்கும் உரிமை இல்லாதவர்களாக தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர்.

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:06 pm

வி.தேவதாசன்

சென்னை, ஜூன் 26: தமிழகத்தில் விரைவில் சட்ட மேலவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், இத்தேர்தலில் ஆசிரியர் தொகுதிகள் இருந்தும், வாக்களிக்கும் உரிமை இல்லாதவர்களாக தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டில் சட்ட மேலவையை அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 78 உறுப்பினர்களைக் கொண்ட மேலவைக்கு 26 பேரை சட்டப்பேரவை உறுப்பினர்களும், 26 பேரை உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் வாக்களித்து தேர்வு செய்வார்கள்.  7 பட்டதாரி தொகுதிகள் வாயிலாக 7 பேரும், 7 ஆசிரியர் தொகுதிகள் வாயிலாக 7 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். 12 பேர் ஆளுநர் மூலம் நியமிக்கப்படுவார்கள்.

ஆசிரியர் தொகுதிகளிலிருந்து தேர்வு செய்யப்பட வேண்டிய 7 பேரை, தமிழ்நாட்டில் பணிபுரியும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள்.  ஆனால், உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டுமே வாக்குரிமை உண்டு. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வாக்குரிமை இல்லை.  

மேலவை உறுப்பினரை தேர்வு செய்ய வேண்டிய ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி அந்தஸ்துக்கு குறையாத பள்ளிகளில் பணிபுரிபவராக இருக்க வேண்டும் என்று அரசியல் சட்டம் கூறுகிறது. இதனால், தெருவுக்குத் தெரு இயங்கிக் கொண்டிருக்கும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் சுயநிதி கல்லூரி ஆசிரியர்கள்கூட வாக்குரிமை பெற்றவர்களாக உள்ளனர். ஆனால், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வாக்குரிமை இல்லாத நிலை உள்ளது.

இந்த விதிமுறை பல முரண்பாடுகள் கொண்டதாக உள்ளது என்று ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வாக்களிக்க வேண்டிய ஆசிரியர் எத்தகைய பள்ளியில் பணிபுரிய வேண்டும் என்பதைதான் விதிமுறை வலியுறுத்துகிறதே தவிர, ஆசிரியரின் தகுதியைப் பற்றி கவலைப்படவில்லை.

உதாரணமாக, 8-ம் வகுப்பு கல்வித் தகுதியோடு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தோட்டக்கலை கற்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக நியமிக்கப்பட்ட தொழில் ஆசிரியர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு மேலவைத் தேர்தலில் ஆசிரியர் தொகுதி பிரதிநிதியை தேர்வு செய்ய வாக்குரிமை உண்டு. ஆனால், முதுகலைப் பட்ட தகுதியோடு பணிபுரியும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு வாக்குரிமை இல்லை. வேண்டுமானால், அவர் பட்டம் பெற்றவர் என்ற முறையில், பட்டதாரி தொகுதி பிரதிநிதியை தேர்வு செய்ய வாக்களிக்கலாம். ஆனால், ஆசிரியர் தொகுதியில் வாக்களிக்க முடியாது.  இது எந்த வகையில் நியாயம் என்று தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் கேட்கின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலப் பொதுச் செயலாளர் க. மீனாட்சிசுந்தரம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் பணிபுரியும் ஆசிரியர்களில் எண்ணிக்கையில் அதிகமானோர் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்தான். எனினும், ஆசிரியர் தொகுதி பிரதிநிதியை தேர்வு செய்யும் உரிமை தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு இல்லை என்பது நியாயமற்றது.

 மேலும், ஆசிரியர் தொகுதியில் இருந்து மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி, ஆசிரியராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலையும் உள்ளது. அவர் ஆசிரியராக இல்லாத நிலையில், அவர் எப்படி ஆசிரியர்களின் பிரதிநிதியாக இருக்க முடியும்

  எனவே, இந்த முரண்பாடுகள் அனைத்தும் களையப்பட வேண்டும். தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும்.  

இது தொடர்பாக மாநில அரசு எதுவும் செய்ய முடியாது. மத்திய அரசுதான் உரிய சட்ட திருத்தம் மூலம் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு வாக்குரிமை வழங்க முடியும்.  இது குறித்து மத்திய அரசிடம் முதல்வர் கருணாநிதி வலியுறுத்த வேண்டும் என்றார் மீனாட்சி சுந்தரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.