/

மாநில அளவில் ரேங்க் வாங்கிய சென்னை மாநகராட்சிப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை

சென்னை, மார்ச் 10: மாநில அளவில் ரேங்க் வாங்கிய கொருக்குப்பேட்டை மாநகராட்சி பெண்கள் பள்ளியில் இப்போது அடிப்படை வசதிகளே இல்லாத அவல நிலை உள்ளது. இதுபற்றி பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதே

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:23 pm

சென்னை, மார்ச் 10: மாநில அளவில் ரேங்க் வாங்கிய கொருக்குப்பேட்டை மாநகராட்சி பெண்கள் பள்ளியில் இப்போது அடிப்படை வசதிகளே இல்லாத அவல நிலை உள்ளது.

இதுபற்றி பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை என்று அப்பள்ளி ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கொருக்குப்பேட்டையில் அமைந்துள்ளது மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் 2,500 மாணவிகள் படிக்கின்றனர். ÷2008-09-ம் கல்வியாண்டில் இப்பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் உணவு பாதுகாத்தல் பிரிவில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சி அளவில் 2-ம் இடத்தைப் பிடித்து சாதனை நிகழ்த்தியது.

அனைத்து வசதிகளையும் பெற்றிருந்த இந்தப் பள்ளியில் இப்போது அடிப்படை வசதிகளே இல்லாத நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து அப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:

பள்ளியில் உள்ள ஆய்வகக் கட்டட சுவரில் ஆங்காங்கே பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. கழிவறை அமைந்துள்ள பழைய கட்டட சுவரில், தொடர்ந்து நீர் கசிவதால் மிகவும் மோசமான நிலைக்கு மாறியுள்ளது. இதனால், சுவர் எப்போது இடிந்து விழும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

குடிநீர் இணைப்பு... பள்ளிக்கு குடிநீர் இணைப்பு இதுவரை வழங்கப்படவில்லை. சென்னையில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் குடிநீர் இணைப்பு உள்ளது. ஆனால், பல முறை கோரிக்கை விடுத்தும் இப்பள்ளிக்கு மட்டும் குடிநீர் இணைப்பு வழங்கப்படாதது ஏன் எனறு தெரியவில்லை.

பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளில் 450 பேர் சத்துணவு சாப்பிடுகின்றனர். பள்ளிக்கு சமையல் கூடமே கட்டித் தரப்படாததால், பல ஆண்டுகளாக பள்ளியின் சைக்கிள் நிறுத்தத்தில் சுகாதாரமற்ற முறையில் சத்துணவு சமைக்கப்படுகிறது.

பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையும் உள்ளது. இப்பள்ளியில் மட்டும் அல்லாமல் மேலும் சில மாநகராட்சி பள்ளிகளிலும் இதுபோன்ற பல்வேறு குறைபாடுகள் உள்ளன என்றார்.

2010-11-ம் ஆண்டுக்கான மாநகராட்சி நிதி நிலை அறிக்கையில், "கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்' என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளதால், பள்ளிக் கட்டடங்களின் தரம் மற்றும் கல்வித் தரத்தை உயர்த்த அதிக நிதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.