சென்னை, மார்ச் 18: வியாசர்பாடியில் உள்ள அஞ்சுகம் தாய் சேய் மற்றும் குடும்பநல வாழ்வு மையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை காரணமாக, பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை தொடர்கதையாகி வருகிறது.
மருத்துவமனையின் கழிவுநீர்க் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், அறுவை சிகிச்சை பிரிவுக்கு அருகில் உள்ள இடத்தில் மலக் கழிவுகளுடன் சேர்ந்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மருத்துவமனை முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடி கணேசபுரத்தில் "சென்னை அஞ்சுகம் தாய் சேய் மற்றும் குடும்ப நல வாழ்வு மையம்' மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தினமும் 500}க்கும் மேற்பட்ட பெண்கள் சிகிச்சைக்காகவும், மகப்பேறு பரிசோதனைக்காகவும் வந்து செல்கின்றனர்.
இந்த மருத்துவமனை வளாகத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவான இளங்கோ நகர் பிரிவு வார்டு 32, 36 பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கானது. இங்கு தினமும் 400}க்கும் மேற்பட்டோர் சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக வருகின்றனர். இந்த மருத்துவமனையில் ஒரு மகப்பேறு மருத்துவர் மற்றும் ஒரு பொது மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு அடுத்து உள்ள கட்டடத்தின் கீழ்ப் பகுதியில் மகப்பேறு அறுவை சிகிச்சைப் பிரிவும், குழந்தைகள் நலப் பிரிவும் உள்ளன. இது வளாகத்தில் உள்ள மூன்று மருத்துவமனைகளுக்கும் பொதுவானது. கட்டடத்தின் மேல் தளத்தில் உள்ள மருத்துவமனை, நேரு நகர் பகுதி மக்களுக்கானது. தினமும் 50}க்கும் மேற்பட்டோர் பரிசோதனைக்காக வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் டாக்டர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. முன்பிருந்தவர் பதவி உயர்வில் மாற்றலாகிவிட்டார். இப்போது, வியாசர்பாடி (வடக்கு) மாநகராட்சி மருத்துவமனை டாக்டர் ஒருவர் வாரத்துக்கு இரண்டு நாள்கள் (திங்கள், வெள்ளி) மட்டும் வந்து செல்கிறார். மற்ற நாள்களில் மூத்த செவிலியர்களே, கர்ப்பிணிகளைப் பரிசோதிக்கின்றனர்.
மூன்றாவது பிரிவு மருத்துவமனையில் வார்டு}39 உள்ளிட்ட சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கானது. தினமும் 50}க்கும் மேற்பட்டோர் இங்கு வருகின்றனர். இந்த மருத்துவமனையிலும் டாக்டர் நியமிக்கப்படவில்லை. பெரம்பூரிலிருந்து மாநகரட்சி டாக்டர் ஒருவர், ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்து செல்கிறார்.
இந்த மூன்று மருத்துவமனைகளுக்கும் வரும், கர்ப்பிணிகளுக்கு பிரசவம், அறுவைச் சிகிச்சை மற்றும் முக்கிய பிரச்னைகளை இளங்கோ நகர் பிரிவில் உள்ள மகப்பேறு மருத்துவரே பார்க்க வேண்டியுள்ளது. "ஸ்கேன்' பார்க்கவும் இளங்கோ நகர் பிரிவுக்கே அனைத்துப் பிரிவினரும் செல்ல வேண்டியுள்ளது. இதனால் அதிக நேரம் அவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
"ஸ்கேன்' பார்ப்பதற்காக வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு வந்த கர்ப்பிணி ஒருவர், மதியம் 12.15 மணி வரை காத்திருந்தார். அதன் பிறகே அவருக்கு "ஸ்கேன்' பார்க்கப்பட்டது.
இதுபோல் ஒவ்வொரு சிகிச்சைக்கும் பெண்கள் பல மணி நேரம் காத்திருக்க நேர்கிறது. இதனால் கடும் உடல் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் கர்ப்பிணிகளிடையே நிலவுகிறது.
பல மாதங்களுக்குப் பின் இப்போதுதான், பொது மருத்துவர் ஒருவரை மாநகராட்சி நியமிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், பொது மருத்துவருக்கு பதில், மேலும் ஒரு மகப்பேறு மருத்துவரை இம்மருத்துவமனைக்கு நியமிக்கவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
கேள்விக்குறியான சுகாதாரம்
மருத்துவமனையில் உள்ள இரண்டாவது பிரிவான நேரு நகர் பிரிவில்தான், குழந்தைகள் நல மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தின் கழிவறையில் பல நாள்களாக கழிவுநீர்க் குழாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மலக் கழிவுடன், கழிவுநீரும் வெளியேறி நடைபாதையில் வழிந்தோடி தேங்கியுள்ளது. இதை ஒட்டியே மகப்பேறு அறுவை சிகிச்சை மையமும் அமைந்துள்ளது.
பல முறை புகார் அளித்தும் அடைப்பு சரி செய்யப்படவில்லை. இதனால் மருத்துவமனை முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, பெரும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது என்று அங்கு பணிபுரியும் செவிலியர்கள் தெரிவித்தனர்.
கட்டடத்தின் மேல் தளத்தில் அமைந்துள்ள மருத்துவமனை கழிவறை, பல நாள்களாக சுத்தம் செய்யப்படாமல் சுகாதார சீர்கேட்டுடன் காட்சியளிக்கிறது. மருத்துவமனைக்கு வெளியில் அமைந்துள்ள, கழிவுநீர் குழாய் மூடி உடைந்து பல நாள்களாக சரிசெய்யப் படாமல் உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு, சிகிச்சைக்காக வந்த பெண் ஒருவர் இந்த கழிவுநீர் பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைந்ததாகவும் அங்கிருப்பவர்கள் தெரிவித்தனர்.
சுகாதாரம் என்ற பெயரில் ஓட்டல்களுக்கும், கடைகளுக்கும் சீல் வைத்துவரும் மாநகராட்சி, தன்னிடத்திலும் சுகாதாரத்தைப் பேணி காக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு

கருப்புடன் வெளியாகும் நூறு சாமி?

சூர்யவன்ஷிக்கு ரசிகரான ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்!
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


