சென்னை, ஏப். 30: புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்க விதிக்கப்பட்டிருந்த தடையை தமிழக அரசு நீக்கியிருப்பது, சென்னையில் போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகரித்துவிடும். விபத்துகளும் அதிகரிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் சாலைகளில் செல்லும்போது சைகை செய்யாமல் திரும்புவது, போக்குவரத்து சிக்னலில் வெள்ளைக் கோட்டைத் தாண்டி நிறுத்துவது, சிக்னல் சிவப்பு விளக்குக்கு மாறும்போது அதிவேகமாக சிக்னலைத் தாண்டிச் செல்வது உள்ளிட்ட போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் மாநகர பஸ்கள், அரசு வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பது ஆட்டோக்கள்தான்.
இந்த விதி மீறல்களால்தான் சென்னையில் போக்குவரத்து நெரிசலும், சாலை விபத்துகளும் அதிகரிக்கின்றன என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இந்த நிலையில் சென்னையில் ஆட்டோக்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையிலான அறிவிப்பை, தமிழக அரசு இப்போது வெளியிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை போக்குவரத்து மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது சென்னையில் கடந்த 12 ஆண்டுகளாக புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது என்ற அறிவிப்பை, போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு வெளியிட்டார்.
இந்த அறிவிப்பு சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் சென்னை மாநகர், கடுமையான போக்குவரத்து பாதிப்புக்கு தள்ளப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
சட்டப்பேரவையில் அந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் நேரு, ""சென்னையைவிட சிறிய நகரங்களான பெங்களூருவில் 78 ஆயிரம் ஆட்டோக்களும், ஹைதராபாத்தில் 64 ஆயிரம் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. ஆனால், சென்னையில் 52 ஆயிரம் ஆட்டோக்கள்தான் இயக்கப்படுகின்றன.
எனவே, சென்னையில் கூடுதல் ஆட்டோக்கள் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு, புதிய ஆட்டோக்கள் பதிவு செய்வதற்கான தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆட்டோக்கள் அதிகரிப்பதன் மூலம், மீட்டரில் காட்டும் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வந்துவிடும்'' என்றார்.
ஆனால், சென்னை போக்குவரத்து காவல்துறை மேற்கொண்ட ஆய்வில் சென்னையில் இப்போது 80 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுவது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளின்படி சென்னையில் 50 ஆயிரம் ஆட்டோக்கள் மட்டுமே முறையான பெர்மிட்டுகளுடன் இயங்குகின்றன. 20 ஆயிரம் ஆட்டோக்கள் வெளி மாநில பெர்மிட்டுகளில், விதிகளை மீறி இயங்கிக் கொண்டிருக்கின்றன.
மீதமுள்ள 10 ஆயிரம் ஆட்டோக்கள் பெர்மிட்டுகளே இன்றி முறைகேடாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவர்கள் மற்றவர்களுடைய பெர்மிட்டுகளை, கலர் ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொண்டு ஆட்டோக்களை இயக்கிக் கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் 40 ஆயிரம் ஆட்டோக்கள் பெர்மிட்டுகள் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று டிராபிக் ராமசாமி போன்ற சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து டிராபிக் ராமசாமி கூறியது:
சென்னையில் முறையான பெர்மிட்டுடனும், பெர்மிட் இல்லாமலும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன. மேலும் டீசல் ஆட்டோக்கள் பதிவு செய்வது, கடந்த 2007-ம் ஆண்டு மார்ச் முதல் நிறுத்தப்பட்டு விட்டது என்று சென்னை (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டபோது தெரிவித்தார். ஆனால் இந்த வண்டிகள், தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்றன. அளவுக்கு அதிகமான நபர்களை ஆட்டோ டிரைவர்கள், ஏற்றிச் செல்கின்றனர்.
இந்த நிலையில், புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்க இருந்த தடையை நீக்கியிருப்பது, சென்னையில் மேலும் பல ஆயிரம் ஆட்டோக்கள் பெருக வழி வகுத்துவிடும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் சமாளிக்க முடியாத நிலையை எட்டிவிடும். விபத்துகளும் அதிகரித்துவிடும்.
எனவே ஆட்டோ பெர்மிட் தடையை அரசு தொடரவேண்டும். ஏற்கெனவே பெர்மிட் இல்லாமல் ஓடும் ஆட்டோக்களுக்கு மட்டும், பெர்மிட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
சென்னை முழுவதும் ஆட்டோ நிறுத்தங்கள்
இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையாளர் எம். ரவி அளித்த பேட்டி:
சென்னையில் ஆட்டோ பெர்மிட் தடை நீக்கப்பட்டிருப்பது மிகவும் நல்ல விஷயம். சென்னையில் ஒரு சிலர் 100 முதல் 150 ஆட்டோக்களை தங்கள் வசம் வைத்துக்கொண்டு, டிரைவர்கள் மூலம் இயக்கி வருகின்றனர். இவர்களிடம் பணிபுரியும் டிரைவர், ஆட்டோ உரிமையாளருக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 150 கொடுத்து விடவேண்டும்.
மேலும் பெர்மிட்டுகளை கள்ளச் சந்தையில் டிரைவர்களுக்கு ரூ. 70 ஆயிரத்துக்கு விற்கும் நடவடிக்கையும் சென்னையில் நடைபெற்று வருகிறது. ஒரு ஆட்டோவின் விலை 1.10 லட்சம். ஆனால், கள்ளச் சந்தையில் பெர்மிட் வாங்குவதால், ஆட்டோ ஒன்றுக்கு ரூ. 2 லட்சம் வரை இவர்கள் கொடுக்க வேண்டியுள்ளது. புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்க இருந்த தடை நீக்கப்பட்டிருப்பதன் மூலம், இந்த முறைகேடுகள் அனைத்தும் தடுக்கப்பட்டுவிடும். ஏழை டிரைவர்கள், முறையான குறைந்த கட்டணத்தில் பெர்மிட் பெற்றுவிடுவர்.
சென்னையில் பெர்மிட் இல்லாமல் ஓடும் பல ஆயிரம் ஆட்டோக்களுக்கு, பெர்மிட் கிடைக்கவும் வழி பிறந்துவிடும். மேலும் பஸ் நிறுத்துங்களில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதை நிரந்தரமாக தடுப்பதற்காக, பஸ் நிறுத்தங்களைப்போல், சென்னை முழுவதும் ஆட்டோ நிறுத்தங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான இடங்களை தேர்வு செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டம் நிறைவேறிவிட்டால், நெரிசல் குறைந்துவிடும். பொதுமக்களும் மீட்டரில் காட்டும் கட்டணத்தில், எளிதாக ஆட்டோவில் ஏறிச்செல்ல முடியும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு

கருப்புடன் வெளியாகும் நூறு சாமி?

சூர்யவன்ஷிக்கு ரசிகரான ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்!
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


