டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கண்களை குளிர்ச்சியாக்கும் சென்னை தாவரவியல் பூங்கா

சென்னை, செப். 13: உதகை, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களில் உள்ளது போல சென்னை மாநகரின் நடுவில் காண்போர் கண்களை குளிர்ச்சியாக்கும் விதத்தில் ஒரு தாவரவியல் பூங்கா உருவாகி வருகிறது. சென்னையின் இதயம் போன

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:39 pm

வி.தேவதாசன்

சென்னை, செப். 13: உதகை, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களில் உள்ளது போல சென்னை மாநகரின் நடுவில் காண்போர் கண்களை குளிர்ச்சியாக்கும் விதத்தில் ஒரு தாவரவியல் பூங்கா உருவாகி வருகிறது.

சென்னையின் இதயம் போன்ற அண்ணா சாலை, அண்ணா மேம்பாலத்தின் தென்புறம், கதீட்ரல் சாலையில் தமிழக அரசின் தோட்டக் கலைத் துறை சார்பில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படும் இந்த பூங்காவில் 22 வகையான தோட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

பூங்காவின் நுழைவாயில் அருகில் மலை, மலை சார்ந்த குளிர்ந்த பகுதிகளில் மட்டுமே வளரக் கூடிய ஆர்க்கிட் மலர்களுக்கென தனித் தோட்டம் உருவாகிறது. ஆர்க்கிட் மலர்கள் வளர்வதற்கு ஏற்ற குறைந்த வெப்ப நிலையை தரும் பிரத்யேக குடில்களை உருவாக்கி, அங்கு ஆர்க்கிட் மலர்களை வளர்க்கத் திட்டமிட்டுள்ளனர்.

அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் குட்டைத் தாவரங்கள் (போன்சாய்) தோட்டம் உள்ளது. இதில் சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட 15-க்கும் மேற்பட்ட வகை தாவரங்கள் உள்ளன.

மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் சில தாவர வகைகளைக் கொண்ட ஒரு தோட்டம் மலைக் காடுகள் என்ற பெயரில் உருவாக்கப்படுகிறது. பூ பூக்காத இனத்தைச் சேர்ந்த பெரணி வகைத் தாவரங்களுக்காக தனித் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

500-க்கும் மேற்பட்ட தாவரங்களுடன் மூலிகைத் தோட்டம் ஒன்று தாவரவியல் பூங்காவில் உள்ளது. அதில் ஒவ்வொரு தாவரத்தின் பெயர், குடும்பம், சிறப்பியல்புகள் போன்ற எல்லா விவரங்களும் பார்வையாளர்களுக்காக எழுதி வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பூங்காவின் ஒரு பகுதியில் சிறு குளம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. குளத்தின் உள்ளேயும், குளத்தைச் சுற்றிலும் இயல்பாக என்னென்ன தாவரங்கள் வளருமோ, அவற்றில் பெரும்பாலான தாவரங்களைக் கொண்ட குளத் தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்ச்சியூட்டுவதாக வண்ணத்துப் பூச்சித் தோட்டம் உள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள குடில்களில் எந்தெந்த மலர்களில் எல்லாம் வண்ணத்துப் பூச்சிகள் அமருமோ அந்தத் தாவர வகைகள் இந்தத் தோட்டத்தில் வளர்க்கப்படுகின்றன.

பார்வையாளர்களை கவரும் மற்றொரு தோட்டமாக தங்கத் தோட்டம் உருவாகி வருகிறது. தங்கத்தின் நிறமான மஞ்சள் நிறத்தில் மலர்கள் மற்றும் இலைகளைக் கொண்ட தாவரங்கள் இந்தத் தோட்டத்தில் வளர்க்கப்படுகின்றன.

அண்ணா சாலையை ஒட்டிய பூங்காவின் ஓரப் பகுதியில் புதர்க் காடுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 14 வகையான மூங்கில்கள் உள்ளன.

பூங்கா என்றாலே அழகிய மலர்களை காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் செல்வர். இதற்காகவே நல்ல மணம் வீசும் மலர்களை உடைய 20 வகையான தாவரங்களுடன் நறுமணத் தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆந்திரத்திலிருந்து கொண்டு வரப்பட்ட 20 வகையான பனை வகைகளுடன் கூடிய பனைத் தோட்டம் சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளது.  

பூங்காவில் ஆங்காங்கே புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளன.  அவைகளில் 5 வகையான புற்கள் நடப்பட்டுள்ளன.  பெரிய மரங்கள் சிலவற்றில் தொட்டிச் செடிகள் தொங்கவிடப்பட்டுள்ளன. அவற்றில் பூச்சியுண்ணும் தாவரங்கள் போன்றவை வளர்க்கப்படுகின்றன.

பூங்காவின் மேற்குப் பகுதியில் செயற்கை அருவி ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து வரும் தண்ணீர் சுமார் 100 மீட்டர் நீளமுள்ள செயற்கை நீரோடையின் வழியாக குளத்தைச் சென்றடைகிறது. ஓடையில் 3 தடுப்பணைகள் அமைக்கப்பட்டு, தண்ணீர் வழிந்தோடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.  இதைத் தவிர 3 செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.  குழந்தைகள் விளையாடி மகிழும் சிறுவர் பூங்கா ஒன்று உள்ளது.  

பல வண்ணத் தாவரங்கள், வண்ண விளக்குகளுக்கு மத்தியில் பொது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான திறந்த வெளி அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் 100 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்கும் வகையில் பார்வையாளர் கேலரி அமைக்கப்பட்டுள்ளது.

பூங்காவைச் சுற்றிப் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் உள்ளது. இதற்காக டிக்கெட் கவுண்டர் அமைக்கப்பட உள்ளது.  உணவுக் கூடம், கழிவறை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 200-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தும் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பூங்காவின் நுழைவு வாயில் ஒரு குகையில் நுழைவது போன்ற எண்ணத்தை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.  

தாவரவியல் பூங்காவை வடிவமைக்கும் பணிகளில் கிரீன் மேக்கர்ஸ் என்ற தனியார் நிறுவனத்தினர்  ஈடுபட்டுள்ளனர்.  தோட்டக் கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகள் பூங்காவை வடிவமைப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் மேற்பார்வை பணிகளை செய்து வருகின்றனர்.

பணிகள் அனைத்தும் முடிந்து அக்டோபர் இறுதிக்குள் பொதுமக்கள் பார்வைக்காக தாவரவியல் பூங்காவை திறந்து விடத் திட்டமிட்டுள்ளதாக தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும்,  மழை அதிகமாக பெய்தால் தோட்டங்கள் அமைக்கும் பணி பாதிக்கப்படும். எனவே, குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை நிறைவு செய்ய காலநிலை சாதகமாக இருப்பது அவசியம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

எப்படி இருப்பினும், மனங்களை இதமாக்கும், கண்கனை குளிர்ச்சியாக்கும் ஒரு தாவரவியல் பூங்கா சென்னை மாநகர மக்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைத்து விடும். நகரின் நடுவே அமையவுள்ள இந்தப் பூங்கா சென்னை நகரின் முக்கியமான சில பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக திகழப் போகிறது என்று இப்போதே சொல்லலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.