ஏழை மாணவர்களின் கல்விக்கு கட்டணம் தடையாக இருக்கக் கூடாது: மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்

சென்னை, ஜன. 8: ஏழை மாணவர்களின் கல்விக்கு, கட்டணம் தடையாக இருக்கக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.  சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் வெள்ளி விழாவில் அவர் சனிக்கிழமை ப
ஏழை மாணவர்களின் கல்விக்கு கட்டணம் தடையாக இருக்கக் கூடாது: மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்
Updated on
1 min read

சென்னை, ஜன. 8: ஏழை மாணவர்களின் கல்விக்கு, கட்டணம் தடையாக இருக்கக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.

 சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் வெள்ளி விழாவில் அவர் சனிக்கிழமை பேசியதாவது:

 தமிழக அரசின் சமச்சீர் கல்வி திட்டம் பாராட்டுக்குரியது. என்னைப் பொறுத்தவரை இத்திட்டம் மூலம் பள்ளிக் கல்வியில் போதிய தரத்தை அரசு நிர்ணயித்துள்ளது. இந்த கல்வித் திட்டத்தை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்.

 பொதுவாக, தரமான கல்வி மலிவாகக் கிடைக்காது. எனினும், ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிப்பதில், கட்டணம் தடையாக இருக்கக் கூடாது.

 அனைத்து குழந்தைகளுக்கும் குறைந்தபட்சம் 8 முதல் 10 ஆண்டுகள் வரை பள்ளிக் கல்வியை கற்பதற்கான நிலையை உறுதிப்படுத்துவது அவசியம்.

 இதேபோல பள்ளிக் கல்வியை முடித்து வெளியேறும் மாணவர்கள் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேருவதையும், இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பொருத்தமான வேலைவாய்ப்புகளை வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றார் அமைச்சர் ப. சிதம்பரம்.

 முன்னதாக பள்ளியின் வெள்ளி விழா சிறப்பு மலரை அவர் வெளியிட்டார்.

 இதில், மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் பேசியதாவது:

 ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி கற்கும் வகையில் கிராமங்கள் தோறும் பள்ளிகளை தொடங்கி வைத்தார் காமராஜர். மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம், அவர்களிடையே ஏற்றத் தாழ்வற்ற நிலையை உருவாக்க சீருடை திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்து கல்வி வளர்ச்சிக்கு அவர் அரும் பணியாற்றினார்.

 இதேபோல, சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைத் தொடங்கியதன் மூலம் அண்ணாமலை செட்டியார் ஏராளமான கிராமப்புற மாணவர்கள் உயர் கல்வி பெற வழிவகுத்தார் என்றார் அமைச்சர் ஜி.கே. வாசன்.

 இதில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார், பள்ளியின் தாளாளர் குமார ராணி மீனா முத்தையா, முன்னாள் துணைவேந்தர் எஸ்.வி. சிட்டிபாபு, மத்திய செகண்டரி கல்வி வாரியத்தின் மண்டல அலுவலர் என். நாகராஜு, பள்ளி முதல்வர் எஸ். அமுதலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com