மதுபான விலை உயர்வால் விற்பனை குறையவில்லை: ரூ. 22 ஆயிரம் கோடி விற்பனை இலக்கு எட்டப்படும்

சென்னை, செப். 16: தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் விற்பனை குறையவில்லை. எனவே, நிகழ் நிதியாண்டில் ரூ. 22 ஆயிரம் கோடி விற்பனை
மதுபான விலை உயர்வால் விற்பனை குறையவில்லை: ரூ. 22 ஆயிரம் கோடி விற்பனை இலக்கு எட்டப்படும்
Updated on
2 min read

சென்னை, செப். 16: தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் விற்பனை குறையவில்லை.

எனவே, நிகழ் நிதியாண்டில் ரூ. 22 ஆயிரம் கோடி விற்பனை இலக்கு எட்டப்படும் என "டாஸ்மாக்' வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ்நாட்டில் "டாஸ்மாக்' மூலம் விற்பனை செய்யப்படும் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை கடந்த 10-ம் தேதி உயர்த்தப்பட்டது. மதுபானங்களின் விலை குறைந்தபட்சம் ரூ. 5 முதல் 20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 6,823 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 1.48 லட்சம் முதல் 1.5 லட்சம் பெட்டி மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சுமார் ரூ. 60 முதல் 65 கோடி வருவாய் ஈட்டப்படுகிறது.

மதுபானங்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டதால் மதுபான பிரியர்கள் அதிருப்தி அடைந்தாலும் அது விற்பனையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. கடந்த மூன்று நாள்களாக, விலை உயர்வுக்கு முன்பு இருந்ததைப் போலவே மதுபான விற்பனை இருந்ததாக "டாஸ்மாக்' வட்டாரங்கள் தெரிவித்தன.

ரூ. 22 ஆயிரம் கோடி இலக்கு: மதுபான சில்லறை விற்பனையை "டாஸ்மாக்' தொடங்கிய 2003-2004-ம் ஆண்டில் ரூ. 3,639 கோடிக்கு மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த விற்பனை 2011-12-ல் ரூ. 18 ஆயிரம் கோடியை எட்டியது. நிகழ் நிதியாண்டில் (2012-13) ரூ. 22 ஆயிரம் கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் இலக்கை எட்டுவதற்கான விகிதாசாரப்படி மதுபான விற்பனை நடந்துள்ளதாகவும், இப்போது விலையை உயர்த்தியுள்ளதன் மூலம் இலக்கை விஞ்சி விற்பனை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணிநீக்கம் செய்ய திட்டம்: மதுபானக் கடைகளில் மதுபான வகைகள் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 1,300 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இப் பிரச்னைக்கு முடிவு கட்ட எதிர்வரும் காலங்களில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வோரை பணிநீக்கம் செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் "டாஸ்மாக்' வட்டாரங்கள் தெரிவித்தன.

"பார்' அனுமதி ரத்து: மது அருந்தும் கூடங்களை (பார்) சுகாதாரமான முறையில் பராமரிப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பார் குத்தகைதாரர்களின் கூட்டம் நடத்தப்பட்டு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இப்போது அதிகாரிகள் குழு ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளது. பார்கள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படாத இடங்களில் அவற்றுக்கான அனுமதி ரத்து செய்யப்படும்.

குத்தகைதாரர்கள் செலுத்தியுள்ள வைப்புத் தொகையும் திருப்பி அளிக்கப்பட மாட்டாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ஓர் பொதுநல வழக்கு காரணமாக உயர் ரக மதுபான வகைகளை விற்பனை செய்யும் "எலைட் ஷாப்' திட்டமும் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உயர் ரக மதுபான வகைகள் தற்போதுள்ள "டாஸ்மாக்' கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com