தொடரும் கடல் அரிப்பு: எண்ணூர் சாலை துண்டாகும் அபாயம்
எண்ணூர் விரைவு நெடுஞ்சாலை 6 வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் எர்ணாவூர், ராமகிருஷ்ணா நகர் அருகே கடல் அரிப்பால் அந்த சாலை துண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


எண்ணூர் விரைவு நெடுஞ்சாலை 6 வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் எர்ணாவூர், ராமகிருஷ்ணா நகர் அருகே கடல் அரிப்பால் அந்த சாலை துண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை காசிமேடு முதல் எண்ணூர் வரை சுமார் 9 கி.மீ. தூரத்திற்கு கடற்கரையை ஒட்டிய எண்ணூர் விரைவு நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் ரூ.600 கோடி மதிப்பீட்டின் கீழ் இரண்டு அணுகு சாலைகள் உள்பட 6 வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இப்பகுதியில் தொடர்ந்து இருந்து வரும் கடல் அரிப்பால் இச்சாலை பாதிக்கப்பட்டு துண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே இச்சாலையின் பெரும் பகுதியை கடல் காவு கொண்டதன் காரணமாக சாலையும் பலமுறை இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டது.
தூண்டில் வளைவுகள்: இந்நிலையில், வடசென்னையில் தொடர்ந்து இருந்து வரும் கடல் அரிப்பைத் தடுக்கும் நோக்கில் காசிமேடு முதல் எண்ணூர் வரை சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் கிராய்ன்ஸ் (எதஞவசஉந) எனப்படும் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கரை நெடுகிலும் பாறாங்கற்களால் ஆன தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் தடுப்புச்சுவர் அமைத்தால் மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தி வைக்க வசதியில்லை என்பதால் சில இடங்களில் தடுப்புச் சுவர் அமைக்கப்படவில்லை.
தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்: எண்ணூர் விரைவு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் கண்டெய்னர் லாரிகளின் போக்குவரத்து நெரிசல் சற்று சீராகி பொதுமக்கள் நிம்மதியடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் தொடர்ந்து கடல் அரிப்பு இருந்து வருகிறது. மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் புயல் ஏதேனும் தாக்கினால் இச்சாலை துண்டாகும் அபாயம் உள்ளது. எனவே இச்சாலையை போர்க்கால அடிப்படையில் சீர் செய்து, தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்கிறார் திருவொற்றியூர் சமூக சேவை சங்க நிர்வாகி கே.சுப்பிரமணி.
ரூ.9 கோடியில் தடுப்புச் சுவர்:இது குறித்து சென்னை-எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலைத் திட்டப் பொறியாளர் பி.டி.மோகன் கூறியது, கடல் அரிப்பால் இச்சாலை பாதிக்கப்படும் என்பதால் தான் திட்ட மதிப்பீட்டிலேயே இதற்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ராமகிருஷ்ணா நகர் பகுதியில் சுமார் 400 மீட்டர் நீளத்துக்கும், சுங்கச்சாவடி பகுதியில் சுமார் 150 மீட்டர் தூரத்துக்கும் கடல் அரிப்புத் தடுப்புச் சுவர் அமைக்கப்படும் என்றார்.
கடல் அரிப்பைத் தடுப்பது மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த வடசென்னை போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் இத்திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...