எண்ணெய் படலம் ஏற்படுத்தும் குழப்பங்கள்...!
விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து வெளியேறி சென்னை எர்ணாவூர் கடற்கரை அருகே படிந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் போதிய திட்டமிடல் இல்லை.


விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து வெளியேறி சென்னை எர்ணாவூர் கடற்கரை அருகே படிந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் போதிய திட்டமிடல் இல்லை. அதன் அளவீடு போன்றவற்றில் உரிய துறைகளுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது வெளிப்படையாகியுள்ளது. இதனால், குழப்ப நிலையே நீடித்து வருகிறது.
கப்பல்கள் விபத்துக்குள்ளான தகவல் சனிக்கிழமை காலை பரவியது. இதையடுத்து, எண்ணூர் காமராஜர் துறைமுகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "லேசான விபத்துதான். மாசு ஏற்படுத்தும் வகையில் எந்தவித எண்ணெய்க் கசிவும் இல்லை, இரு கப்பல்களும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் ஞாயிற்றுக்கிழமையே பெரிய அளவிலான எண்ணெய் படலம் எர்ணாவூர் கடற்கரையை வந்தடைந்தது. தகவலறிந்த கடலோரக் காவல் படையினர் தன்னிச்சையாக எண்ணெய் படலத்தை உறிஞ்சி எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அசாம்பாவிதங்களைத் தவிர்க்க, போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.
பல யோசனைகள் சொன்னாலும்...: இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டார். பின்னர், தீயணைப்பு- மீட்புப் பணிகள் துறை, கழிவுநீர் அகற்றல் வாரியம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டனர். பின்னர் தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. ஆனால் எண்ணெய் படலத்தை அகற்றுவதில் ஆளுக்கொரு யோசனையைச் சொன்னாலும், இறுதியில் ஆள்கள் மூலம் அகற்றுதல் என்ற பழைமையான முறையே செயல்பாட்டுக்கு வந்தது.
கணக்கிட்டதோ 4 டன்- இதுவரை எடுத்ததோ 100 டன்: சுமார் 4 டன் அளவுக்கே எண்ணெய் படலம் இருக்கும் என முதலில் மதிப்பிடப்பட்டதுதான் இதற்கு காரணம். இருப்பினும், புதன்கிழமைவரை அகற்றப்பட்ட எண்ணெய் படலத்தின் அளவு சுமார் 100 டன்னைத் தாண்டிவிட்ட நிலையில் இன்னும் 100 டன் எண்ணெய் அகற்றப்பட வேண்டியுள்ளது.
குழப்பம் நீடிக்கிறது: இதனால், படலத்தின் அளவு மீதான அதிகாரிகளின் மதிப்பீடும், உண்மையான அளவீடும் ஒப்பிட முடியாத அளவுக்கு இருக்கிறது. மேலும், பணியை ஒருங்கிணைப்பது யார்?, விளக்கமான திட்ட அறிக்கை போன்றவை தொடர்பாக பதில் இல்லை. இதையடுத்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இவ்வாறு கூட்டமாகப் பணி செய்ய வேண்டிய அவசரம் என்ன? இதனால் பாறாங்கற்களாலான கடலரிப்பு தடுப்புச் சுவர் முழுதும் எண்ணெய் படலத்தால் தார் பூசப்பட்டுவிட்டது. அகற்றும் பணி நிறைவுற்ற பிறகு இந்தத் தடுப்புச் சுவரைப் பயன்படுத்துவோர்கள் வழுக்கி விழுந்து ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது.
எனவே முழுமையான மதிப்பீடு, திட்டமிடல் ஏதும் இல்லாமல் திசை போன போக்கில் பணி நடைபெறுகிறது என்பதே சமூக ஆர்வலர்களின் வேதனையாக உள்ளது.
கடலோரக் காவல் படையே பொறுப்பு- ஆட்சியர்
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இ.சுந்தரவல்லியிடம் கேட்டபோது, அவர்கள் கூறியது:-
எண்ணெய் கசிவு குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு போதிய அனுபவம் இல்லை. கடலோரக் காவல்படைதான் செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் கடைப்பிடிக்கும் வழக்கமான தொழில்நுட்பத்தால் எண்ணெய் படலத்தை அகற்ற முடியவில்லை. பிறகு ஆள்கள் மூலம் அகற்றலாம் என முடிவெடுத்துக் கூறியதன் பேரில்தான் தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கிறது. தமிழக அரசு உயர் அதிகாரிகள் அனைத்துப் பணிகளையும் கண்காணித்து வருகின்றனர். தடுப்புச் சுவர் முழுவதும் எண்ணெய் படலம் சிதறிக் கிடப்பது குறித்து கடலோரக் காவல் படையினர்தான் பதிலளிக்க வேண்டும் என்றார்.
கடலில் பணியாற்றுவது கடமை- கடலோரக் காவல் படை: இதுகுறித்து கடலோரக் காவல் படை அதிகாரி அலோக் சர்மாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: விபத்து ஏற்பட்டவுடன் ரோந்துக் கப்பலுடன் சென்று, பணியில் ஈடுபட்டோம். ஆனால் அதற்குள் எண்ணெய் படலம் கரைக்கு வந்துவிட்டது. கடலில் மட்டுமே எண்ணெய் கசிவை அகற்றி அனுபவம் பெற்றுள்ளோம். ஏனெனில் இதற்கான வசதிகள் கப்பல்களில் அமைக்கப்பட்டிருக்கும். கரைப் பகுதியில் ஈடுபடுவது இல்லை. மாநில எல்லையின் அதிகார வரம்புக்குள் கரைப்பகுதி வந்துவிட்ட பிறகு இதற்கான பணிகளை மாநில அரசுதான் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
"எதிர்காலத்தில் ஏற்படப் போகும் ஆபத்துகளை எதிர்கொள்ளத் தேவையான படிப்பினையை இந்தக் கப்பல் விபத்து வலியுறுத்துகிறது. இதை படிப்பினையாகக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும்' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
மீன் விற்பனை குறைந்தது: பரிதாப நிலையில் மீனவர்கள்
கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதையடுத்து, கடல் மீன்கள் விற்பனை வெகுவாகக் குறைந்தது. இதனால் மீனவர்கள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எர்ணாவூர், மெரீனா கடற்கரைகளில் சில ஆமைகள் அண்மையில் இறந்து கரை ஒதுங்கின. பரிசோதனையில் இவை ஏற்கெனவே இறந்து, அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது.
ஆனால், எண்ணெய்க் கசிவால் ஆமைகளும், மீன்களும் இறந்து மிதக்கின்றன என தகவல்கள் பரவியதால், பொதுமக்களிடையே பீதியைக் கிளப்பிவிட்டது. சுமார் 200 ஆண்டுகள் வரை ஆமைகள் உயிர்வாழ கூடியது. லட்சக்கணக்கான ஆமைகள் வாழும் வங்கக் கடலில் அவ்வப்போது சில ஆமைகள் இறந்து போன நிலையில் கரை ஒதுங்குவது வாடிக்கையானது.
சுனாமி ஏற்பட்டபோது, மனித சடலங்களை மீன்கள் உண்டன என தகவல் பரவியதால், மீன்கள் சாப்பிடுவதை பெரும்பாலானோர் தவிர்த்தனர். இதேபோல், மாசடைந்த எண்ணெய்க் கழிவுகளை மீன்கள் சாப்பிடுவதாக பரவிய செய்தியை அடுத்து பெரும்பாலானோர் மீன்களை வாங்க மறுப்பதாக மீனவப் பெண்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். பொதுவாக, 7 நாள்கள் வரை ஆழ்கடல் சென்று விசைப்படகுகள் பிடித்து வரப்படும் பெரிய ரக மீன்களையும் பொதுமக்கள் வாங்குதில் அச்சம் நிலவுகிறது. இதனால் காசிமேடு மீன்சந்தையில் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர், காசிமேடு, எண்ணூர் பகுதிகளில் கட்டுமரம், பைபர் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...