8 நாள்கள் ஆகியும் தீராத எண்ணெய்க் கழிவுப் பிரச்னை: திட்டமிடலில் ஏற்பட்ட தோல்வியே காரணம்?
கடந்த ஜனவரி 28-ஆம் தேதி எண்ணூர் அருகே நடைபெற்ற இரண்டு கப்பல்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்து குறித்து ஒரு புறம் விசாரணையும்,


கடந்த ஜனவரி 28-ஆம் தேதி எண்ணூர் அருகே நடைபெற்ற இரண்டு கப்பல்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்து குறித்து ஒரு புறம் விசாரணையும், மறுபுறம் சேதமான கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
8 நாள்களாகியும் இப்பிரச்னைக்கு தீர்வும், விபத்துக்கான காரணங்கள் கிடைக்காததற்கு திட்டமிடலில் ஏற்பட்ட தோல்வியே காரணம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
விபத்து ஏற்பட்டது எப்படி? எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் சமையல் எரிவாயுவை இறக்கிய பி.டபுள்யூ மாபில் என்ற டேங்கர் கப்பல், துறைமுகக் கால்வாய் வழியாக வெளியேறியது. அப்போது டீசல், மோட்டார் ஸ்பிரிட் ஏற்றிக்கொண்டு டான் காஞ்சிபுரம் என்ற கப்பல் துறைமுகத்துக்கு உள்ளே வந்தது. இந்த இரு கப்பல்களும் எதிர்பாராத விதமாக, "டி' வடிவில் மோதிக் கொண்டன.
இந்த விபத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், சரக்குகளை இறக்குவதற்காக டான் காஞ்சிபுரம் கப்பலை துறைமுகத்துக்குள்ளே அனுமதித்தனர்.
இந்த இரு கப்பல்களும் இப்போது நடுக் கடலில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விபத்து குறித்த கேப்டன் சுபாஷ்குமார் தலைமையில் ஒரு நபர் விசாரணை நடைபெற்று வருகிறது.
கரை ஒதுங்கிய எண்ணெய் படலம்: விபத்து நடந்த நாளன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் லேசான விபத்துதான் எனவும், இதனால் எவ்வித எண்ணெய்க் கசிவும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டிருந்தது.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலை கருப்பு நிற போர்வை போன்ற எண்ணெய்ப் படலம் எர்ணாவூர் பாரதியார் நகர் அருகே கடற்கரையில் ஒதுங்கியது. இந்தப் பகுதியில் ஏராளமான ஆமைகள், மீன்கள் செத்து மிதந்தன. இதனையடுத்து அன்று இரவே எண்ணெய் படலத்தை அகற்றும் பணியை கடலோரக் காவல் படையினர் தொடங்கினர்.
எண்ணெய் படலத்தை உறிஞ்சி எடுக்கும் கருவி மூலம் மேற்கொள்ளப்பட்ட அந்தப் பணி தோல்வியில் முடிந்தது. இதனால், இரண்டாம் நாளில் ஊழியர்கள் மூலம் நேரடியாக பக்கெட்டுகளைக் கொண்டு எண்ணெய்க் கழிவை கையால் அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வாசுதேவன் ஆகியோர் கடலோரக் காவல்படையினருடன் இணைந்து இந்தப் பணிகளை மேற்பார்வையிட்டனர்.
மதிப்பீட்டில் தோல்வி, இலக்கை எட்டாத நோக்கம்: கழிவுகளை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியபோது, 4 டன் அளவில் மட்டுமே எண்ணெய் கழிவு கடலில் கலந்துள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், இன்று வரை 200 டன் அளவுக்கு எண்ணெய் கழிவு அகற்றப்பட்டுவிட்டபோதும், கடலில் கலந்திருக்கும் எண்ணெய் படலம் குறையவில்லை என்று தெரியவந்துள்ளது.
தொடக்கத்தில் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த 25 பேர் மட்டுமே அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட நிலையில், இப்போது மாநகராட்சி, கழிவு நீர் அகற்றல் வாரியம், தீயணைப்பு படையினர், நெடுஞ்சாலைத் துறை, சென்னை, எண்ணூர் துறைமுகங்களின் ஊழியர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இருந்தபோதும், எடுக்க எடுக்க எண்ணெய் படலம் குறையவில்லை.
இதற்கு மதிப்பீடு, திட்டமிடலில் ஏற்பட்ட தோல்வியே காரணம் என்கின்றனர் நிபுணர்கள். வெளியேறிய எண்ணெய்க் கசிவின் அளவை, கப்பல் நிறுவனம் தெரிவிக்காத நிலையில் கழிவுகளை மதிப்பீடு செய்தது யார்? அகற்றும் பணிக்கான வரைவுத் திட்டம் யாரால் வகுக்கப்பட்டது? என்ற கேள்விகளுக்கு மாவட்ட நிர்வாகத்திடமோ அல்லது கடலோரக் காவல்
படையினரிடமோ பதில் இல்லை. மேலும் இப்பிரச்னையால் மீன்களை பொதுமக்கள் வாங்கி சாப்பிடுவதில் தொடர் அச்சம் நிலவுகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிஸ் கட்சி மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் தலைவர்கள் இப்பகுதிக்கு வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.
எண்ணெய் படலத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என அவசர அவசரமாகக் கழிவுகள் கடலிலிருந்து அகற்றப்பட்டு வரும் நிலையில், அவற்றிலிருந்து வெளியேறும் சிதறல்களால் கடற்கரை மணல் பகுதி, தடுப்புச் சுவர்கள், அருகாமையில் அமைந்துள்ள சாலைகளிலும் எண்ணெய்க்கழிவுகள் பரவியுள்ளன.
தண்ணீருக்குள் இருந்தபோது ஒரளவு கெட்டியாக இருந்த இக்கழிவுகள், வெயில் காரணமாக உருகி சாலையில் வழிந்து ஓடுகிறது. இதனால், அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...