டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஒரு மாதத்தை கடந்தும் நிறைவடையாத எண்ணெய் படிமங்களை அகற்றும் பணி

கடலில் மிதந்த எண்ணெய், என்ன வகையான எண்ணெய்? அதன் மூலக்கூறுகள் என்ன?, கையாளும் போது ஏற்படும் விளைவுகள் என்ன? என அறிவதற்குள்ளாகவே வாளி மூலம் அகற்றத் தொடங்கினர்

News image
Updated On :11 மார்ச் 2017, 8:51 pm

முகவை க.சிவக்குமார்

அனுபவமும் இல்லை... இலக்கும் இல்லை...!
ரசாயனம் முதல் வாழைநார்வரை...

கடலில் மிதந்த எண்ணெய், என்ன வகையான எண்ணெய்? அதன் மூலக்கூறுகள் என்ன?, கையாளும் போது ஏற்படும் விளைவுகள் என்ன? என அறிவதற்குள்ளாகவே வாளி மூலம் அகற்றத் தொடங்கினர் கடலோரக் காவல் படையினர்.
இதில் ஆர்வத்துடன் ஈடுபட்ட தன்னார்வலர்கள், மாணவர்களில் பணியின் போது உடல் முழுதும் எண்ணெயைக் பூசிக்கொண்டு அவதிக்குள்ளாயினர்.
இதில் ஈடுபட்டவர்களுக்கு தோல்நோய்கள் உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படும் எச்சரித்துள்ளதால் மேலும் பீதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் எண்ணெய்ச் சிதறல் படிமங்களை அகற்ற பல்வேறு முறைகளைக் கையாண்டு வருகின்றனர். இதற்காக தினமும் பல்வேறு வகையான ரசாயனங்கள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான சோதனைகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளதா அல்லது அறிந்துள்ளதா என்பதும் தெரியவில்லை.
கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒருவர் பந்து பொன்ற ஒரு பொருளைக் கொண்டு சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் கேட்டபோது அது வாழை நாரினால் தயாரிக்கப்பட்டது, இதனைக் கொண்டு எண்ணெய்ப் பிசுக்குகளை
சுத்தமாக நீக்க முடிகிறது என்றார். ரசாயனக் கலவையில் தொடங்கி வாழை நாருக்கு வந்துவிட்டது எண்ணெய் நீக்கும் பணி.
பரிசோதனையின் முடிவுதான் என்ன? கருப்பாக இருப்பதை வெள்ளையாக்க முடியுமா? என்பதே பொதுமக்களின் கேள்வி.

 விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய் படலத்தை அகற்றியபோது, சிதறிய எண்ணெய் படிமங்களை அகற்றித் தூய்மைப்படுத்தும் பணி ஒரு மாதத்தைக் கடந்தும் நிறைவடையவில்லை. தூய்மைப்படுத்துதற்கான இலக்கு என்பதே நிர்ணயிக்கப்படாததால் இப்பணிகள் இப்போதைக்கு முடியும் சாத்தியமில்லை என பல்வேறு தரப்பினரும் புகார் கூறுகின்றனர்.
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த ஜனவரி 28 ஆம் தேதி எம்.டி. மாபில் என்ற கப்பல் மோதியதில் எம்.டி.டான் காஞ்சிபுரம் என்ற சரக்குக் கப்பல் சேதமடைந்தது. இதிலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கழிவுகள் எர்ணாவூர் பாரதியார் நகர் கடற்கரை அருகே படலமாகத் தேங்கியது. இந்நிலையில் இதனை வாளிகள் மூலம் அகற்றும் பணி கடந்த ஜனவரி 29-ம் தேதி முதல் பிப்ரவரி 9 ஆம் தேதிவரை தொடர்ந்து 12 நாள்கள் நடைபெற்றன. கடலோரக் காவல் படையினர் தலைமையில் நடைபெற்ற இப்பணியில் பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர்.
அப்போது மொத்தம் சுமார் 300 டன் வரை எண்ணெய்க் கழிவுகள் அகற்றப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், அகற்றப்பட்ட எண்ணெய் கழிவுகள் அனைத்தும் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இங்கு உயிரி தொழில்நுட்பம் மூலம் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாதவகையில் அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஒரு மாதம் ஆகியும் தூய்மையாகவில்லை: இந்த நிலையில், எண்ணெய்க் கழிவுகளை அகற்றும்போது ஏற்பட்ட சிதறல்களால் இப்பகுதி முழுதும் மாசடைந்தது. இவற்றைத் தூய்மைப்படுத்தும் பணி கடந்த ஒரு மாதத்தைக் கடந்தும் முழுமையாக நிறைவடையவில்லை. இதற்கு காரணம் தடுப்புச் சுவர் பாறாங்கற்கள் முழுவதும் பரவியுள்ள எண்ணெய்ச் சிதறல்களை அகற்றுவது அவ்வளவு எளிதான விஷயமாக இல்லை. எண்ணெயைக் கரைக்கும் ரசாயனம் கலந்த கலவையை முதலில் எண்ணெய்ச் சிதறல்கள் மீது தெளித்து, பின்னர் மிகுந்த அழுத்தத்துடன் பிஸ்டன்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து எண்ணெயைக் கரைத்தனர். ஆனால் இவ்வாறு தூய்மைப்படுத்தப்படும் எண்ணெய் கலந்த தண்ணீர் மீண்டும் கடலில்தான் கலக்கிறது. மேலும் பாறாங்கற்களின் இடுக்குகளில் எண்ணெய்ச் சிதறல்கள் பெருமளவில் புகுந்துள்ளதால் இவற்றை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், எண்ணெய்ப் படலமும் கடற்கரையில் படர்ந்து காட்சியளிக்கிறது. துறைமுகம் சார்பில் போடப்பட்ட தடுப்புக் குழலும் இன்னும் அகற்றப்பட வில்லை. தற்போது தேங்கியுள்ள எண்ணெயை, வாளிகள் மூலம் அகற்றினால் பாறாங்கற்கள் மீண்டும் அசுத்தமாகும். எனவே இன்னும் பல நாள்கள் தொடர்ந்து இப்பணியைச் செய்தாலும் முழுமையாக தூய்மைப்படுத்த முடியாது என்பதே தற்போதைய நிலை.
அனுபவமும் இல்லை, இலக்கும் இல்லை: கடலில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு கரையை அடைந்தால் அதனை எவ்வாறு அகற்றுவது என்பதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் எவ்வித நவீன தொழில்நுட்பமும் கிடையாது அல்லது அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றாலும் அனைத்து துறையினரிடையேயும் தொடக்கத்திலேயே ஒருமித்த கருத்து ஏதும் எட்டப்படவில்லை.
தேங்கிய எண்ணெய்ப் படலத்தின் மொத்த அளவைக் கூட மதிப்பிடாமலேயே அகற்றும் பணி தொடங்கப்பட்டது. கழிவுநீர் லாரிகளின் மோட்டார்கள் மூலம் தார் போன்ற கடிமத் திறன் கொண்ட எண்ணெயை உறிஞ்ச முடியுமா என்ற தெரியாமல் செயல்பட்டதால் பல லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட புதிய டேங்கர் லாரிகள் நாசமாயின. எண்ணெய்க் கழிவுகள் மீண்டும் கடலுக்குள்தான் செல்கிறது என்பதைக் கூட உணராமல் தினமும் சுமார் 10 பேர் முகமூடிகளை அணிந்து கொண்டு தண்ணீரைப் பீய்ச்சியடித்துக் கொண்டிருந்தனர். அனுபவமும், இலக்கும் இல்லாத பணியின் முடிவு இவ்வாறாகத்தான் இருக்கும் என்பதே இப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.