டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருவொற்றியூர் சாலையில் பெருக்கெடுக்கும் கழிவுநீர்: பொதுமக்கள் அவதி

எர்ணாவூர் சுனாமி மறுவாழ்வுத் திட்ட குடிசை மாற்று வாரிய வீடுகளிலிருந்து வரும் கழிவு நீரை வெளியேற்ற முறையாகத் திட்டமிடாததால் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுக்கும் அவல நிலை

News image
திருவொற்றியூர் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் சாக்கடைக் கழிவு நீர்.
Updated On :9 மே 2017, 11:24 pm

முகவை க.சிவக்குமார்


எர்ணாவூர் சுனாமி மறுவாழ்வுத் திட்ட குடிசை மாற்று வாரிய வீடுகளிலிருந்து வரும் கழிவு நீரை வெளியேற்ற முறையாகத் திட்டமிடாததால் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுக்கும் அவல நிலை நீடிக்கிறது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோர மக்களின் மறுவாழ்வு, சாலை விரிவாக்கத்தின் போது வீடுகளை இழந்தவர்களுக்கு மறுகுடியமர்த்தல் திட்டங்களின் கீழ் எர்ணாவூரில் சுமார் 3500 வீடுகளை அமைக்கப்பட்டன. இது படிப்படியாக அதிகரித்து சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வெளியேற்றப்படும் மக்களுக்கும் இங்கு வீடுகள் கட்டப்பட்டன. தற்போது சுமார் 7 ஆயிரம் வீடுகள் இங்குள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட தொகுப்பு அடுக்குமாடி வீடுகளில் சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
பாதாளச் சாக்கடை வசதி இல்லை: பாதாளச் சாக்கடை வசதிக்கான இணைப்புகள் இங்கில்லாததால் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் தொட்டிகளில் சேமிக்கப்பட்டு லாரிகள் மூலம் அகற்றப்பட்டன. ஆனால், அதிகக் கழிவு நீரை லாரிகள் மூலம் அகற்ற முடியவில்லை. இதனால் கழிவு நீர் தெருக்களில் தேங்கியதால் குடியிருப்புவாசிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர் நகராட்சியாக இருந்தபோது 18 வார்டுகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக சாலைகளில் குழாய்கள் பதிக்கப்பட்டு வீடுகளுக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டன. ஆனால் சுத்திகரிப்பு மையங்கள் செயல்பாட்டுக்கு வராததால் கழிவுநீரை பாதாளச் சாக்கடை மூலம் வெளியேற்ற முடியவில்லை.
செயல்பாட்டுக்கு வராத குழாயில் கழிவு நீர் வெளியேற்றம்: பாதாளச் சாக்கடைத் திட்டத்தின் கீழ் கழிவு நீரகற்றல் வாரியம் சார்பில் ராமகிருஷ்ணா நகரிலிருந்து பாரத்நகர், ஜோதிநகர், சத்திய மூர்த்தி நகர் வழியாக பக்கிங்காம் கால்வாய்வரை பிரதானக் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
குடிசை மாற்று வாரிய வீடுகளின் கழிவுநீர், மோட்டார் பம்புகள் மூலம் செயல்பாட்டுக்கு வராத இக்குழாய்களில் செலுத்தி எவ்வித சுத்திகரிப்பும் இன்றி பக்கிங்காம் கால்வாயில் வெளியேற்றப்படுகிறது. இதற்கென ஆங்காங்கே விசைப் பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கழிவு நீர் வெளியேற்றப்படும்போது ஏதாவது ஒரு மோட்டார் பம்பு செயல்படாவிட்டால் எதிர் அழுத்தம் ஏற்பட்டு ஆள் இறங்கும் குழிகள் வழியாக கழிவு நீர் வெளியேறுகிறது.
சில நிமிடங்களில் சாலையில் கழிவு நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து கழிவு நீரை வெளியேற்றும் மோட்டார் நிறுத்தப்பட்ட பின் கழிவு நீர் வெளியேற்றப்படுவது நிற்கிறது. இருப்பினும் கழிவுகளால் அப்பகுதியில் அடுத்த சில நாள்களுக்கு துர்நாற்றம் வீசும் அவல நிலை உள்ளது.
வாரியங்கள் அலட்சியம்:முறையான அனுமதியின்றி கழிவு நீரை வெளியேற்றுவது குடிசைமாற்று வாரிய அதிகாரிகள்தான். கழிவுநீரை லாரிகள் மூலம் அகற்ற முடியாததால் இங்கு வசிக்கும் மக்களின் நலன் கருதி இவ்வாறு வெளியேற்றுவதாகக் கூறுகின்றனர்.
இதுகுறித்து சென்னை கழிவு நீரகற்றல் வாரிய அதிகாரிகள் கூறும்போது, இப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாதாளச் சாக்கடைத் திட்டம் கழிவு நீரகற்றல் வாரியத்தின் கட்டுமானப் பிரிவு நிர்வாகத்தில் உள்ளது. முறையாக அனைத்துப் பணிகளும் முடிவடையாததால், இயக்குதல் மற்றும் நிர்வகித்தல் பிரிவுக்கு இன்னும் ஒப்படைக்கவில்லை. செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்னால் குடிசை மாற்று வாரியம் கழிவு நீரை வெளியேற்றுவது முறையல்ல. மேலும் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திய பிறகுதான் மக்களைக் குடியமர்த்தி இருக்க வேண்டும் என்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.