சுதந்திர தினத்தையொட்டி, சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில் 760 பேர் பங்கேற்ற மாநில அளவிலான யோகா போட்டி நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில யோகா வளர்ச்சி சங்கம், சென்னை மாவட்ட யோகா வளர்ச்சி சங்கம் இணைந்து புதன்கிழமை நடத்திய 10-ஆவது ஆண்டு மாநில அளவிலான யோகா போட்டிக்கு தமிழ்நாடு மாநில யோகா வளர்ச்சி சங்க நிர்வாகி மு.கதிரவன் தலைமை வகித்தார். யோகா சாதனையாளர் அ. அருளீஸ்வரன் போட்டியைத் தொடங்கி வைத்தார். இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 760 பேர் கலந்து கொண்டு பல்வேறு வகையான ஆசனங்களை செய்தனர்.
ஒட்டுமொத்த பிரிவில் திருவள்ளூர் ஏ.பி.எஸ். வித்யா மந்திர் பள்ளி முதல் பரிசையும், ஸ்ரீ நிகேதன் பள்ளி இரண்டாம் பரிசையும், ஆர்.எம்.ஜெயின் வித்யாஷ்ரம் மூன்றாம் பரிசையும் வென்றது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். இதில், மனோ யோகாச்சாரியார், சமூக சேவகர் துரைராஜ், தமிழ்நாடு மாநில யோகாசன சங்கத் தலைவர் ஜே. ரகுக்குமார், சென்னை மாவட்ட யோகாசன சங்கத் தலைவர் சுரேஷ் குமார், யோக ஆசிரியர் ஆர்.தயாளன், எம். தண்டபாணி, அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.