டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் மீனவர்களுக்கு அடுக்குமாடி வீடுகள்

நீண்டகால குத்தகை அடிப்படையில் திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி கோயில் நிலத்தை குடிசைமாற்று வாரியம் சார்பில் அமைக்கப்பட உள்ள அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்துக்கு வழங்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

News image
Updated On :10 பிப்ரவரி 2018, 8:34 am

முகவை க.சிவக்குமார்

நீண்டகால குத்தகை அடிப்படையில் திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி கோயில் நிலத்தை குடிசைமாற்று வாரியம் சார்பில் அமைக்கப்பட உள்ள அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்துக்கு வழங்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதையடுத்து சாலை விரிவாக்கத்தால் வீடுகளை இழந்து தவிக்கும் நல்ல தண்ணீர் ஓடைக்குப்பம் மக்களின் 10 ஆண்டுகால பிரச்னைக்கு முடிவு ஏற்பட்டுள்ளது. 

பிரச்னையின் பின்னணி: சென்னை-எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலை திட்டத்துக்கு திருவொற்றியூர், தண்டையார்பேட்டை பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவர்கள் எர்ணாவூரில் அமைக்கப்பட்டுள்ள குடிசைமாற்று வாரிய வீடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். ஆனால் திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடைக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள், தங்களை இப்பகுதியிலிருந்து இடம் மாற்றினால் மீன்பிடித் தொழில் செய்வதில் சிரமம் ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி வீடுகளைக் காலி செய்ய மறுத்து வந்தனர்.

இதனால் பெரும்பாலான இடங்களில் திட்டப் பணிகள் நிறைவுற்றாலும் இப்பகுதியில் மட்டும் குறுகிய சாலையாகவே இருந்து வந்தது. அதையடுத்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், தங்கள் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படாதவாறு அருகில் வீடுகளை அமைத்துத் தந்தால் தாங்கள் இடம் பெயரத் தயார் எனத் தெரிவித்தனர். 

இந்நிலையில் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலுக்குச் சொந்தமான காலி நிலத்தில் நல்ல தண்ணீர் குப்பத்தைச் சேர்ந்த 446 மீனவ குடும்பங்களுக்கு வீடுகளை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து சுமார் ரூ.50 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி வீடுகள் அமைப்பதற்கான ஒதுக்கீடு உத்தரவை கடந்த மார்ச் 28-ம் தேதி நிதி மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கினார். இதையடுத்து வீடுகளைக் கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளியும் கோரப்பட்டது. 

திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் எதிர்ப்பு: இதையடுத்து இப்பிரச்னைக்கு முடிவு ஏற்பட்டுவிட்டது என்ற நிலையில் இத்திட்டத்துக்கு கோயில் நிலத்தை வழங்க திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். குப்பம் பகுதியைச் சேர்ந்த, சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மனையோ அல்லது வீடோ அமைத்துத் தரும்படி பல ஆண்டுகளாகக் கோரி வருகிறோம். எனவே, சாலை விரிவாக்க மறுகுடியமர்த்தல் திட்டத்தின் கீழ் இந்த நிலம் ஒதுக்கப்படுவதை ஏற்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இப்போராட்டம் சுமார் 38 நாள்கள் நீடித்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டத்தை திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் கைவிட்டனர். 

குத்தகைக்கு வழங்க தமிழக அரசு ஒப்புதல்: அதேவேளையில், வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் வெளியில் தங்கியிருந்த நல்ல தண்ணீர் ஓடைக்குப்பம் மீனவர்கள் இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வரை சாலை அமைக்கும் பணிகளைத் தொடங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதையடுத்து அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

குத்தகைக்கு ஒப்புதல்: இந்நிலையில், கடந்த ஜன.30-ம் தேதி தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் தியாகராஜர் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 2.14 ஏக்கர் நிலத்தை மாத வாடகை ரூ.5.34 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இங்கு அடுக்கு மாடி வீடுகளைக் கட்டும் பணியை குடிசை மாற்று வாரியம் உடனடியாகத் தொடங்கியுள்ளது. மேலும் வீடுகள் கட்டப்பட உள்ள காலி நிலத்தைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டு வெளியாள்கள் யாரும் உள்ளே செல்ல முடியாதவாறு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 10 ஆண்டுகளாக நீடித்து வந்த தொடர் பிரச்னைக்கு முடிவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.