வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பட்ஜெட்: துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான சாத்தியக் கூறுகள் அனைத்தும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளதாக துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி கூறினார்.

News image
பட்ஜெட் குறித்துப் பேசுகிறார் துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி. உடன் இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு தலைவர் ரூபன்ஹோப்டே, தமிழ்நாடு கிளைத் தலைவர் ஆர்.எம். அருண், ஒருங்கிணைப்பாளர் விக்ரம் வ
Updated On :12 பிப்ரவரி 2018, 11:03 pm

DIN

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான சாத்தியக் கூறுகள் அனைத்தும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளதாக துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி கூறினார்.
இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற "பொருளாதாரமும் பட்ஜெட்டும்' என்ற தலைப்பிலான விவாத நிகழ்ச்சியில் துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேசியது:
மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி பிப்.1}ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2018}19}ஆம் நிதியாண்டுக்கு தாக்கல் செய்த பட்ஜெட்டில், விவசாயம், ஊரக வளர்ச்சிக்கு மிகப் பெரும் முதலீடுகளுடன் தொலைநோக்குத் திட்டங்களை அறிவித்திருக்கிறார். இது நாட்டின் நீண்ட கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும். 
குறைந்தபட்ச ஆதார விலை: விவசாய விளைபொருள்கள் உற்பத்தியாகும் கிராம, ஊரகப் பகுதிகளிலேயே டிஜிட்டல் சந்தையை அறிமுகப்படுத்துவதன் மூலம், விளைபொருள் கொள்முதலை முறைப்படுத்துவதன் வாயிலாக, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கும். அதாவது நாட்டில் 91 ஆயிரம் கிராமங்களுக்கு கண்ணாடி இழை கேபிள் மூலம் (ஆப்டிகல் ஃபைபர்) இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் 587 மார்க்கெட்டிங் சொசைட்டிகள் உள்ளன. இங்கு உரிய கிடங்குகள், பதப்படுத்தும் வசதிகள் போன்றவை ஏற்படுத்த இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் உள்ள சிறு விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருளுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை இடைத்தரகர் இன்றி நேரடியாகப் பெற முடியும். இணையதள வசதி மூலம் விவசாய உற்பத்திக்கான ஆதார விலை அறிவிக்கப்படும்போது, அது அனைத்து விவசாயிகளுக்கும் தெரிய வரும். இதனால் அவர்கள் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
சுகாதாரப் பாதகாப்புத் திட்டம்: உலகிலேயே மிகப் பெரிய அரசு சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் 10 கோடி குடும்பங்களில் உள்ள 50 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்வதோடு, ஏழை எளிய மக்கள் தரமான மருத்துவ சேவையைப் பெற இயலும். ஊரகப் பகுதி சாலை மேம்பாட்டுத் திட்டங்களின் கால எல்லையை 2022}லிருந்து 2019}க்குள் முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பங்கு ஏற்கெனவே நிறைவேறிவிட்டன. அது மட்டுமின்றி, தேசிய நெடுஞ்சாலை அமைப்புத் திறனாக நடப்பு ஆண்டு அறிவிக்கப்பட்ட 9 ஆயிரம் கி.மீ. என்பதை உயர்த்தி, எதிர்கால இலக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊரகப் பகுதிகளில் இருந்து மற்ற இடங்களுக்கு குறிப்பாக கல்விக் கூடங்கள், மருத்துவமனைகளுக்கான போக்குவரத்து இணைப்பு எளிமையாகும்.
7 கோடி புதிய வேலைவாய்ப்புகள்: கடந்த 4 ஆண்டுகளில் 7 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. தொழில் ரீதியான படிப்புகளுக்கு இப்போது வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. திறன் மேம்பாடு மற்றும் தொழில் சார்ந்த திறமை இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் உண்டு. வேலைவாய்ப்பு என்றால் அதில் சிறு குறு வேலைவாய்ப்புகள் இருக்கும். அதில் பக்கோடா விற்பதும் அடங்கும். சுய வேலைவாய்ப்புகள்தான் முக்கியமானது. 
வாராக் கடன் கொள்கையில் சீர்திருத்தம்: வாராக் கடனைப் பெறுவதில் உள்ள கொள்கை சார்ந்த நடைமுறைகளில் முற்றிலும் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், பெரும் நிறுவனங்கள், குடிசைத் தொழில் மேற்கொள்வோர் என தனித்தனி வரையறைகளைக் கொண்டுவர வேண்டும். அதேபோன்று சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை நான் எதிர்க்கிறேன். காரணம் நமது நாட்டில் 90 சதவீத மக்கள் இன்றளவும் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இத்துறையில் தான் ஏராளமான வேலைவாய்ப்பு குறிப்பாக சுயவேலைவாய்ப்பு உள்ளது என்றார் எஸ்.குருமூர்த்தி.
இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு தமிழகப் பிரிவுத் தலைவர் ஆர்.எம். அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.