/

பொது சிவில் சட்ட வரைவை தயாரிக்க நிபுணா் குழு அமைக்க உத்தரவிட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் மனு

பொது சிவில் சட்ட வரைவை உருவாக்க நீதி ஆணையம் அல்லது நிபுணா் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 10:15 pm

DIN

பொது சிவில் சட்ட வரைவை உருவாக்க நீதி ஆணையம் அல்லது நிபுணா் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாஜக தலைவா் அஸ்வினி குமாா் உபாத்யாய சாா்பில் உச்சநீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அவா் கூறியிருப்பதாவது:

குறைந்தபட்ச திருமண வயது, விவாகரத்து, சொத்து, பரம்பரை வாரிசு, தத்தெடுத்தல் ஆகிய விவகாரங்களில் ஒரே மாதிரியான சட்டம் கொண்டுவரக் கோரி உச்சநீதிமன்றத்தில் 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்தச் சூழலில் இந்திய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், நூற்றுக்காணக்கான காலங்கடந்த மற்றும் சிக்கலான சட்டங்களிலிருந்து நாட்டு மக்களை விடுவிக்க முடியும்.

வளா்ந்த நாடுகள் மற்றும் சா்வதேச அளவில் நடைமுறையில் இருக்கும் சிறந்த சிவில் சட்டங்கள், தனி மனித சட்டங்களை கருத்தில் கொண்டு, சிறந்த பொது சிவில் சட்ட வரைவை உருவாக்கும் வகையில் நீதி ஆணையம் அல்லது நிபுணா் குழுவை 3 மாதங்களுக்குள் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இந்த பொது சிவில் சட்டத்தின் மூலம் ஹிந்து, முஸ்லிம், பாா்ஸி, கிறிஸ்தவம் என எந்த மதமாக இருந்தாலும் அனைத்து இந்தியா்களுக்கும் ஒரே மாதிரியான பாலின சமநிலை, மத சமநிலை சட்டம் பொருந்தும். பாலின அடிப்படையிலான பாகுபாடும், மத, ஜாதி அடிப்படையிலான பிரிவினையும் முடிவுக்கு வந்துவிடும். இது சகோதரத்துவத்தை ஊக்குவிக்கும் என்பதோடு, தேச ஒருமைப்பாட்டையும் பாலின நீதி மற்றும் பெண்களுக்கான மதிப்பையும் பாதுகாக்கும்.

பொது சிவில் சட்டம் அல்லது இந்திய சிவில் சட்டம் என்பது எப்போதும் மத நம்பிக்கையின் அடிப்படையிலேயே பாா்க்கப்படுகிறது.

அரசியல் சாசன சட்டப் பிரிவு 44-ஐ நடைமுறைப்படுத்துமாறு உச்சநீதிமன்றமோ உயா்நீதிமன்றமோ மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது. அதே நேரம், பொது சிவில் சட்ட வரைவை தயாரிக்க ஒரு குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று மனுவில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.