இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தம்பதி தற்கொலை: தப்பிப் பிழைத்த நாயின் பாசப் போராட்டம்

கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட  தம்பதியின் பாசக் கயிற்றிலிருந்து மீண்டு வந்திருக்கிறது அவர்களின் வளர்ப்பு நாய் "ஷாம்". 

News image
கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை: உயிர் பிழைத்த நாய்
Updated On :1 ஜூலை 2021, 11:12 am

டி.குமாா்

கடன் தொல்லையால்  தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் பாசக் கயிற்றிலிருந்து மீண்டு வந்திருக்கிறது அவர்களின் வளர்ப்பு நாய் "ஷாம்". 

சென்னை மந்தைவெளி பகுதியில்,  ஏஎம் கார்டன்  சிவராமன் தெரு ஏ பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி சாந்தி. லோகநாதன் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்வது, பால் விநியோகம் செய்வது, பகுதி நேரமாக வாடகை ஆட்டோ ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு வேலைகளை தனது வருமானத்திற்காக செய்து வந்துள்ளார். இவருக்கும், இவரது மனைவிக்கும் திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை இல்லை.

லோகநாதன் பல்வேறு தொழில்களை செய்து வந்தாலும் போதுமான வருமானம் கிடைக்காததால் அவருக்கு அதிகளவில்  கடன் இருந்துள்ளது. இதனால் அருகில் வசிப்பவர்கள், பழக்கமானவர்கள், நண்பர்கள் என தனக்கு நன்கு அறிமுகமான பலரிடம் லோகநாதன் வட்டிக்கு கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவரின் வீடு கடந்த வியாழக்கிழமை (ஜூன் 24) காலை நெடுநேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அருகில் வசிப்பவர்கள், அபிராமபுரம் காவல்துறையினருக்கு  தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், வீட்டின் உள்ளே லோகநாதனும் அவரின் மனைவி சாந்தியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து தனித்தனியாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கான மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

லோகநாதனும் அவரது மனைவியும் தூக்கிட்டுக் கொள்ளும் போது அவர்களது வளர்ப்பு நாய் ஷாம் தங்களது மறைவிற்கு பின் தனியாக இருக்கும் என்பதால் அதனின் முகத்தை பிளாஸ்டிக் பையால் சுற்றி கொல்ல முயன்றுள்ளனர். ஆனால்  நாய்  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவலர்கள், கரோனா  பொது முடக்கத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்பால்,   கடனையும், அதற்கான வட்டியையும் திரும்பக் கொடுக்க முடியாமல் தவித்து வந்த லோகநாதன் கடன் கொடுத்தவர்களின் நெருக்கடியால், விரக்தியடைந்து தனது மனைவியுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இவை எதுவுமே தெரியாத செல்லப்பிராணியான நாய் ஷாம் அவர்களது சடலங்களைச் சுற்றி வந்து காண்போரை கலங்கச் செய்தது. வளர்ப்பு நாய் ஷாமை மீட்டு, முதலுதவி சிகிச்சையளித்து பராமரித்து வரும் விலங்குகள் நல ஆர்வலர் மஞ்சுளா கணேசன் கூறியதாவது : 

ஷாம் குறித்து எனக்கு தகவல் கிடைத்த 2 மணி நேரத்தில் நான் அங்கு சென்றேன். அங்கே சோகமாக இருந்த ஷ்யாமுக்கு முதலுதவி சிகிச்சையளித்தேன். பின்னர் இறப்புக்கு வந்திருந்தவர்களிடம் நாயை வளர்க்கும்படி கேட்டேன். அங்கு  யாருமே அதற்கு முன்வரவில்லை.

எனவே நானே அழைத்து வந்துவிட்டேன். அந்த நாயை,  இறந்த தம்பதியினர் கடந்த 2016-ஆம் ஆண்டு தத்தெடுத்ததாகவும், அதனை பிள்ளையைப் போன்று வளர்த்ததாகவும் அங்கிருந்தவர்கள் கூறினர்.

மேலும் 5-6 வயது மதிக்கத்தக்க அந்த நாய்க்கு,  கையால் பிசைந்தே உணவுகளை ஊட்டி வந்துள்ளனர்.  மிரட்சியில் இருந்து நாய்  மீண்டிருந்ததால், சற்றே ஆவேசத்துடன் இருந்தது. புதியவர்களை நெருங்க விடவில்லை. இறந்த தம்பதிகளை அது தேடுவதை உணர முடிந்தது. தற்போது தான் அது சாந்தமாகி வருகிறது.

கடன் தொல்லையால் தன்னை வளர்த்தவர்களை இழந்த நாய் ஷாமுக்கு பண கஷ்டத்தின் காரணமாக சிகிச்சை கிடைக்காமல் போய்விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதனை பிள்ளை போல் பாவித்து வளர்த்த குடும்பத்தை போன்ற இன்னொரு பாசமான குடும்பத்துக்கு தத்துக் கொடுப்பேன் என்றார்.

பல்முனை தாக்குதல் நடத்தும் கரோனாவை விட கொடியது கடன் கொடுத்த மனிதர்களின் சொல்முனை தாக்குதல். கந்துவட்டி கொடுமைகளைத் தடுக்க எத்தனை சட்டம் கொண்டு வந்தாலும், தற்கொலை செய்து கொள்பவர்களின் பட்டியல் குறைந்தபாடில்லை.  

இத்தகைய கொடூரங்களை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை ஒரு  தீர்வல்ல. இதை மனிதர்களுக்கு நினைவூட்டுவதற்காகவே  உயிர் பிழைத்திருக்கிறது நாய் "ஷாம்" என்றால் அது மிகையாகாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.