அனைத்து ஏரிகளையும் தூர் வாருவதற்கு 'டிரிப்பில் ஆர்' திட்டம்: அமைச்சர் துரைமுருகன் 

அனைத்து ஏரிகளையும் தூர் வாருவதற்கு என டிரிப்பில் ஆர் என்று ஒரு திட்டம் இருப்பதாகவும், அதனை செயல்படுத்த உள்ளதாகவும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: அனைத்து ஏரிகளையும் தூர் வாருவதற்கு என டிரிப்பில் ஆர் என்று ஒரு திட்டம் இருப்பதாகவும், அதனை செயல்படுத்த உள்ளதாகவும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில்  மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் பயன்படும் வகையில் உணர்வு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது, அதனை கடந்த 12-ம் தேதி காணொலி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் இன்றைய தினம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறுகையில்,

ஒரு சாதாரண இடத்தை அற்புதமான பூங்காவாக மாற்றியுள்ளனர் என்றும், சாதாரண பூங்காவாக இல்லாமல் உணர்வு பூங்காவாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் இந்த பூங்காவை அமைத்துள்ளனர் என்று கூறினார்.

இந்த பூங்காவை எனது பேரக்குழந்தைகள் பார்த்துவிட்டு என்னை சென்று பார்வையிட வேண்டும் என பரிந்துரைத்தனர். எனவே இங்கு வந்து பார்த்த போது இந்த பூங்கா அற்புதமாக உள்ளது என்ற அவர்,  மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் பூங்கா, ரூ.2.23 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது என்றும், இதுதொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தபோது தெரிவித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாததால், தற்போது இந்த பூங்கா புனரமைக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆட்சிக்கு வந்து ஓராண்டில் பாதி நாள் கொரோனா, வெள்ளம் என இதிலே சென்றுவிட்டதால் தற்போது அத்தியாவசிய பணிகளில் கவனம் செலுத்தபட்டு வருகிறது என்றார்.

திமுக ஓராண்டு ஆட்சியை, அதிமுக புகழவா செய்வார்கள் என்று கிண்டலாக பேசிய துரைமுருகன், எதிர்க்கட்சி என்பதால் அவர்கள் விமர்சனம் தான் செய்வார்கள் என்று பதிலளித்தார். 

மேலும் அதிமுக ஆட்சியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்றதா என்ற கேள்வி இருக்கிறது என்று பேசிய துரைமுருகன், தொடர்ந்து திமுக அந்த பணிகளை செய்து வருவதாக கூறினார். 

அதுமட்டுமின்றி அனைத்து ஏரிகளையும் தூர் வாருவதற்கு என 'டிரிப்பில் ஆர்' என்று ஒரு திட்டம் இருப்பதாகவும், அதனை செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டார். 
அதேபோல் 5 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்த ஆண்டு 120 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை செய்வது பற்றி தனக்கு தெரியாது என்றும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com