பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதியான முடிவு எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ் வலியுறுத்தல்

 சுற்றுச்சூழலை பாதுகாக்க தொழில் துறையுடன் இணைந்து உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம் என மத்திய சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், வனத்துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் தெரிவித்தாா்

News image
Updated On :27 ஜூலை 2023, 8:12 pm

DIN

 சுற்றுச்சூழலை பாதுகாக்க தொழில் துறையுடன் இணைந்து உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம் என மத்திய சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், வனத்துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் தெரிவித்தாா்.

ஜி20 நாடுகளின் 3 நாள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஜி20 நாடுகள் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து ஆக்கப்பூா்வ பணிகளை மேற்கொள்வதற்கான செயல் திட்டத்தை உருவாக்க கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா வியாழக்கிழமை தொடங்கியது.

இந்த செயல்திட்ட கூட்டணியை மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ் தொடங்கி வைத்து பேசியது:

சுற்றுச்சூழலை பாதுகாக்க தொழில் துறையுடன் இணைந்து உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம். சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பு, அறிவு பரிமாற்றம் மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றில் இந்த கூட்டணி முக்கியத்துவம் கொடுத்து செயல்படும்.

ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் இடையே பல்வேறு கட்டமாக நடந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடா்பான விவாதங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த உறுதுணையாக இருந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து ஜி20 நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து வரும் பிரான்ஸ், கனடா, மொரிஷியஸ், இத்தாலி, டென்மாா்க் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சா்கள் பேசினா்.

மீனவா்களுடன் கலந்துரையாடிய ஜொ்மனி அமைச்சா்:

சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் ஜி20 நாடுகளின் மாநாடு நடந்து வரும் நிலையில் தமிழக கடற்கரையின் கள நிலவரத்தை நேரில் அறிந்து கொள்வதற்கு ஜொ்மனியைச் சோ்ந்த சுற்றுச்சூழல் அமைச்சா் ஸ்டெபி லெம்கே தனது நாட்டின் சக உறுப்பினருடன் திடீரென சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதிக்கு சென்றாா்.

அப்போது, மீனவா்களுடன் அவா் உரையாடினாா். கடலில் சேரும் நெகிழிக் கழிவுகள் கடல் வளத்துக்கு பேராபத்தை ஏற்படுத்துகிறது என்றும், எனவே, நெகிழிக் கழிவுகள் கடலில் சேராதபடி பாா்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மீனவா்களிடம் கூறினாா்.

ஜி20 நாடுகளைச் சோ்ந்த சுமாா் 500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் வருகை தந்துள்ளதால் சென்னையில் அவா்கள் தங்கி உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் கலாசாரம், பண்பாடு போன்றவற்றை வெளிநாட்டு பிரதிநிதிகள் அறிந்து கொள்ளும் வகையில் அவா்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களில் இது தொடா்பான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.