அப்பாடா! கொருக்குப்பேட்டை மக்களுக்கு வருகிறது விடிவுகாலம்!!

வடசென்னை பகுதியான கொருக்குப்பேட்டையில் வாழும் மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயம் இறுதியில் கட்டமைப்புப் பணி தொடங்கும் நிலைக்கு வந்திருக்கிறது.
கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தைக் கடந்துசெல்ல உதவும் ரயில்வே மேம்பாலம்
கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தைக் கடந்துசெல்ல உதவும் ரயில்வே மேம்பாலம்
Published on
Updated on
1 min read

சென்னை: வடசென்னை பகுதியான கொருக்குப்பேட்டையில் வாழும் மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயம் இறுதியில் கட்டமைப்புப் பணி தொடங்கும் நிலைக்கு வந்திருக்கிறது.

அதுதான் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தைக் கடந்துசெல்ல உதவும் ரயில்வே மேம்பாலம். தற்போது தண்டவாளத்தைக் கடந்து செல்வது ஒன்றுமட்டுமே வழியாக இருந்த நிலையில், கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தைக் கடந்து செல்வதற்கான மேம்பாலம் அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது.

இந்த ரயில்வே மேம்பாலம், 96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து, கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தையும், அருகில் உள்ள பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்படவிருக்கிறது.

இதன் மூலம், வாகன ஓட்டிகளுக்கு பெரும் நிம்மதி கிடைக்கப்போகிறது. மணலி சாலையைப் பயன்படுத்துபவர்களும், தொண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, மின்ட், மணலி ஆகிய பகுதிகளுக்கு இடையே போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நடைபாதையுடன் இரட்டை வாகனப் பாதையைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே மேம்பாலம் முடிந்ததும் இதுபோன்று மணலி பகுதியிலிருக்கும் இரண்டு தண்டவாளத்தை கடக்கும் பாதைகளுக்கும் மேம்பாலங்கள் கட்டமைக்கும் பணி தொடங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த பாதையில் தண்டவாளத்தைக் கடக்கும் அமைப்பு இருப்பதால் பல மணி நேரம் கேட் பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலையும் பிறகு கடுமையான போக்குவரத்து நெரிசலும் காணப்படுவது வழக்கம். பணி நேரங்களில் இப்பகுதியைக் கடப்பதே மிகப்பெரிய சவாலாக மாறிவிடும்.

இந்தப் பாதையை நாள்தோறும் சுமார் 1,50,000 வாகனங்கள் கடந்து செல்வதாக போக்குவரத்துத் துறை தெரிவிக்கிறது.

இந்த தண்டவாளப் பகுதியை சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே இயக்கும் ரயில்கள், விரைவு ரயில்கள்  உள்பட நாள் ஒன்றுக்கு 170 ரயில்கள் கடக்கின்றன. இதனால், பல்வேறு தரப்பிலிருந்தும் ரயில்வே மற்றும் மாநகராட்சி இரண்டுக்கும் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com