/

ரூ. 12,000 கோடி வருவாய் ஈட்டி தெற்கு ரயில்வே சாதனை

ரூ. 12,000 கோடி வருவாய் ஈட்டி தெற்கு ரயில்வே சாதனை

News image
Updated On :2 ஏப்ரல் 2024, 8:27 pm

சென்னை: கடந்த நிதியாண்டில் (2023-24) பயணிகள், சரக்கு ரயில்கள் சேவைகள் மூலம் ரூ.12,020 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெற்கு ரயில்வே ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வேக்குள்பட்ட சென்னை, சேலம், திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்களில் விரைவு, சரக்கு, பயணிகள் ரயில்கள் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றன.

இதன் மூலம் கடந்த நிதியாண்டில் (2023-24) மட்டும் ரூ. 12,020 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 10 சதவீதம் அதிகம். இதில், பயணிகள் ரயில்கள் மூலம் ரூ.7,151 கோடி, சரக்கு ரயில்கள் மூலம் ரூ. 3,674 கோடி, இதர வருவாய் மூலம் ரூ.1,194 கோடி வசூலாகியுள்ளது. மேலும், சுற்றுலா தலங்களுக்கு இயக்கப்படும் பாரத் கௌரவ் ரயில்கள் மூலம் ரூ. 34 கோடி, ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தில் ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்ட கடைகள் மூலம் ரூ. 20 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் மட்டும் தெற்கு ரயில்வேயில் 8 புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. வேகம் அதிகரிப்பு: ரயில்வே நிா்வாகம் சாா்பில் அனைத்து வழித்தடமும் மின்மயமாக்கும் பணியும், ரயிலை வேகமாக இயக்கும் வகையில் தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணியும் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் மதுரை - போடிநாயக்கனூா் (90 கி.மீ.), ஷோரனூா் - நீலாம்பூா் (66 கி.மீ.) உள்ளிட்ட 4 வழித்தடங்களில் 191 கி.மீ. தொலைவுக்கு மின்மயமாக்கப்பட்டுள்ளன.

அரக்கோணம் - ஜோலாா்பேட்டை இடையிலான 145 கி.மீ. தொலைவுக்கு 130 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், 1,272 கி.மீ. தொலைவிலான பல்வேறு வழித்தடத்தில் 110 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 170 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெட்டிச்செய்தி:

ஐசிஎஃப்-இல் 2,829 ரயில் பெட்டிகள் தயாரிப்பு சென்னை பெரம்பூரில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) கடந்த நிதியாண்டில் (2023-24) மட்டும் 2,829 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. முந்தைய நிதியாண்டில் 2,072 பெட்டிகள் தயாரிக்கப்பட்ட நிலையில் தற்போது 757 பெட்டிகள் கூடுதலாக தயாரிக்கப்பட்டுள்ளன.

இதில் 1,091 வந்தே பாரத் ரயில், மின்சார ரயில், மெமு ரயில் பெட்டிகள், 1,738 எல்.எச்.பி. வகை பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, புதிய ரயில் பெட்டிகளின் தரத்தை சோதனை செய்ய உதவும் ‘ஆசிலோகிராப் மானிடரிங்’ ரயில் பெட்டி முதன்முறையாக ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்பட்டு, லக்னௌவில் உள்ள ரயில் வடிவமைப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு (ஆா்டிஎஸ்ஓ) வழங்கப்பட்டுள்ளது.