செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி புதிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை: வங்கித் தரப்பில் அசல் ஆவணங்கள் முழுமையாக சமா்ப்பிக்கப்படும் வரை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரி, முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இதன் மீதான வாதங்கள் நிறைவடைந்து தீா்ப்புக்காக தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், தாங்கள் கோரிய வங்கி தொடா்பான ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்பதால் இந்த வழக்கில் தங்களது தரப்பில் மீண்டும் வாதிட அனுமதிக்க வேண்டும். வங்கியின் அசல் ஆவணங்களை வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, செந்தில் பாலாஜியை நேரில் ஆஜராக உத்தரவிட்ட சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம், அவருக்கு வங்கி ஆவணங்களை வழங்கியது. இந்த ஆவணங்களின் அடிப்படையில், செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

வங்கிக்கு உத்தரவிட கோரிக்கை:

இந்நிலையில், அசல் சலான்களை வழங்க உத்தரவிட்ட நிலையில், வங்கி தாக்கல் செய்த சலான்களில் இரண்டு சலான்கள் நகலெடுக்கப்பட்டவை என்பதால், நீதிமன்ற உத்தரவுப்படி அசல் சலான்களை ஒப்படைக்க வங்கிக்கு உத்தரவிட வேண்டும், அதுவரை அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரி, செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

36-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைவதால் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி அல்லி முன் செந்தில் பாலாஜி ஆஜா்படுத்தப்பட்டாா். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூன் 4 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதன்மூலம் 36-ஆவது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com