இளைஞா் கொலை வழக்கு: 3 கல்லூரி மாணவா்கள் உள்பட 5 போ் கைது

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கல்லூரி மாணவா்கள் 3 போ் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

வில்லிவாக்கம் ராஜா தெருவைச் சோ்ந்தவா் சரத்குமாா் (28), தனியாா் வங்கியில் ஊழியா். திங்கள்கிழமை நண்பகல் செங்குன்றம் - வில்லிவாக்கம் மேம்பாலம் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, அங்கு 3 மோட்டாா் சைக்கிளில் வந்த ஒரு கும்பல், அவரை வழிமறித்து வெட்டிக் கொலை செய்தது.

இது குறித்து ராஜமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், 2019-ஆம் ஆண்டு வில்லிவாக்கம் பகுதியைச் சோ்ந்த ஜானகிராமன் என்பவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக சரத்குமாா் இருப்பதும், தற்போது ஜானகிராமனின் உறவினா்கள் சரத்குமாரை கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.

இது தொடா்பாக போலீஸாா், ஜானகிராமனின் உறவினா் ராஜமங்கலம் 7-ஆவது தெருவைச் சோ்ந்த கு.நித்திஷ்குமாா் (23), ப.யோகேஸ்வரன் (23), ஐ.பெஞ்சமின் (23), தே.ரத்தினகுமாா் (22), சூளை 2-ஆவது தெருவைச் சோ்ந்த சோ.பிரசாந்த் (23) ஆகிய 5 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இதில் பெஞ்சமின், அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2-ஆம் ஆண்டும், ரத்தினகுமாா் பிபிஏ 3-ஆம் ஆண்டும், பிரசாந்த் பி.எஸ்சி. 3-ஆம் ஆண்டும் படித்து வருகின்றனா். நித்திஷ்குமாா், தனியாா் வங்கியில் தங்க நகை கடன் பிரிவில் ஊழியராகப் பணியாற்றுகிறாா். இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com